"வட்டார வழக்கு".. இது ரத்தம் சொட்டிய மண்ணில்.. வியர்க்க விறுவிறுக்க வளர்ந்த காதல்!

Su.tha Arivalagan
Dec 14, 2023,04:51 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: மதுரை மேற்கு பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய வட்டார வழக்கு திரைப்படம் நீண்ட தாமதத்திற்குப் பின்னர், டிசம்பர் 29ஆம் தேதி வெளிவர உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


டூலெட் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் சந்தோஷ் நம்பிராஜன். இவர்தான் வட்டார வழக்கு திரைப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். சந்தோஷ் நம்பிராஜன் டூ லெட் படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.




லவ் டுடே படத்தில் நடித்தவரும், மாமன்னன் படத்தில் பஹத் பாசிலின் மனைவியாக வந்து பலரது உள்ளங்களைக் கொள்ளையடித்தவருமான ரவீனா ரவி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். முழு அளவிலான மதுரைக்காரப் பெண்ணாக இவர் அடித்துக் கலக்கியுள்ளாராம். வசனம் பேசுவதிலும் சரி, மேனரிசத்திலும் சரி.. "மதுரைக்காரி"யாக மாறியிருக்கிறாராம் ரவீனா ரவி.




ரவீனா ரவி ஆரம்பத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகத்தான் இருந்து வந்தார். பல பிரலபல நாயகிகளுக்குக் குரல் கொடுத்து வந்தவர் ரவீனா. அவருக்குள் இருந்த நடிப்புத் திறன் லவ் டுடே மூலம் வெளிப்பட்டபோது அனைவரும் வியந்தனர். அதில் யோகி பாபுவுக்கு ஜோடியாக வந்திருப்பார் ரவீனா. அதைத் தொடர்ந்து மாமன்னன் படத்தில் அவரது கேரக்டர் வெகுவாக பேசப்பட்டது. ஜாதி வெறி பிடித்த கணவனின் செயல்களை கலக்கத்துடன் பார்த்துப் பார்த்து மருகும் மனைவியாக வந்திருப்பார் ரவீனா ரவி. 


இப்படத்தை கந்தசாமி ராமச்சந்திரன் இயக்குகிறார். மூடர் கூடம் தோனி ஷார்ட் மற்றும் சுரேஷ் மணியன் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.




வட்டார மொழிகள் சார்ந்த படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வட்டார வழக்கு திரைப்படமும் மதுரை மேற்கில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு பகை, காதல், கோபம், வெறுப்பு, கொலை, வழக்கு, என பல பரிமாணங்கள் கொண்ட படமாக உருவாகியுள்ளது. இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமா சந்தித்த காதல் காட்சிகள் போல் இல்லாமல், காதல் வசனங்கள் இல்லாமல், இவ்வளவு ஏன் காதலர்கள் நேரில் சந்திக்காமல் மலர்ந்த ஒரு புதுவித காதல் உணர்வை இப்படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளனர். 




மதுரையில் உள்ள கல்லுப்பட்டி என்ற கிராமம்.. இதுதான் இந்தக் கதையின் மையக் களம். இத்தனை ஆண்டுகள் ஆகியும் எந்தவித வளர்ச்சியும் இல்லை. இன்னும் பழமை உணர்வுடன் இருப்பது தெரியவந்தது . இதனால் இந்த கிராமத்தில் தான் வட்டார வழக்கு திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளதாம்.