"இந்தியா" கூட்டணி  தலைவரானார் மல்லிகார்ஜூன கார்கே.. "Co ordinator".. ஆர்வம் காட்டாத நிதீஷ் குமார்!

Manjula Devi
Jan 13, 2024,05:08 PM IST
டெல்லி: எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவராக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதீஷ் குமாருக்கு வழங்க கூட்டணிக் கட்சிகள் விரும்பியும் கூட அதை ஏற்க அவர் மறுத்து விட்டார்.

தேசிய அளவில் அதிரடியாக உருவாக்கப்பட்ட கூட்டணிதான் இந்தியா கூட்டணி. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரினமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. பாஜகவை வீழ்த்த அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணிக்கு இதுவரை தலைவர் நியமிக்கப்படாமல் இருந்தது. அதேபோல ஒருங்கிணைப்பாளர் பதவியையும் கூட்டணி கட்சிகள் யோசித்து வந்தன. இந்த நிலையில், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், கனிமொழி எம்.பியும் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி, சரத்பவார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.



இந்தக் கூட்டத்தில் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு யாரைப் போடலாம் என்பது குறித்து விவாதம் எழுந்தது. இறுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கூட்டணியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை நிதிஷ் குமாருக்கு வழங்க அனைத்துத் தலைவர்களும் ஒரு மனதாக பெயரை பரிந்துரைத்தனர். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். தனக்கு இதில் விருப்பம் இல்லை என்றும் பதவியை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறி விட்டார்.

நிதிஷ் குமாரின் முடிவால் குழப்பம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக மமதா பானர்ஜி மற்றும் அகிலேஷ் யாதவுடன் தான் பேசவுள்ளதாக கார்கே தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு விரைவில் வெளியாகும் எனவும் தலைவர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டன என்பது நினைவிருக்கலாம்.