மரண தண்டனை.. கேரள டிரைவரை காப்பாற்ற ரூ. 34 கோடி நிதி திரட்டிய மலையாளிகள் !
ரியாத்: சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள டிரைவரை காப்பாற்றுவதற்காக சர்வதேச அளவில் மலையாளிகள் சங்கங்கள் இணைந்து ரூபாய் 34 கோடியை திரட்டி பெரிய சாதனை படைத்துள்ளன.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் ஒரு சவுதி சிறுவனின் மரணத்திற்கு காரணமாக அமைந்தார். எதிர்பாராத விதமாக நடந்த இந்த மரணத்தால் இவர் கைது செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவுதி அரேபியாவை பொறுத்தவரை மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை கொடுத்து அவர்கள் மன்னித்தால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். அதன்படி இவருக்கு 34 கோடி இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டது . அந்த பணத்தை கொடுத்து மன்னிப்பை பெற்றுக் கொண்டால் அவர் விடுதலை ஆகலாம் என்ற நிலை உருவானது.
இதை அடுத்து சர்வதேச அளவில் மலையாளிகள் சங்கங்கள் பல இணைந்து இவருக்காக நிதி திரட்ட ஆரம்பித்தன. மிகப்பெரிய தொகையான 34 கோடியை எப்படி திரட்ட போகிறார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அனைத்து மலையாளிகளும் இணைந்து மிகக் கடுமையாக பாடுபட்டு இந்த நிதியை தற்போது திரட்டி முடித்து விட்டனர். தேவைப்படும் ரூபாய் 34 கோடிக்கு மேலாகவே நிதி திரண்டு விட்டதால் இனி யாரும் நிதி அனுப்ப வேண்டாம் என்று மலையாளி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 34 கோடி போக மீதமுள்ள பணத்தை வேறு பல நல்ல காரியங்களுக்கு செலவிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக அப்துல் ரஹீம் மரணத்திலிருந்து தப்புகிறார்.
இந்த பணத்தை விரைவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கொடுத்து அவர்களது மன்னிப்பை பெற்ற பின்னர் அப்துல் ரஹீம் விடுதலை செய்யப்படுவார். கடந்த 18 வருடங்களாக சிறையில் வாடி வரும் அப்துல் ரஹீம் தற்போது சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார். மரணத்திலிருந்தும் தப்புகிறார்.
75 க்கு மேற்பட்ட மலையாளி சங்கங்கள், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் பாபி செம்மனூர், பல்வேறு அரசியல் அமைப்புகள், சாமானிய மக்கள் என உலகம் முழுவதும் பரவி விரவியுள்ள மலையாளிகள் அனைவரும் இணைந்து இந்த நிதி நிதியை சேகரிக்கும் மிகப்பெரிய பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.