பாலியல் அத்துமீறல்களில் சிக்கித் தவிக்கும் மலையாள நடிகைகள்.. புட்டு வைத்த நீதிபதி ஹேமா ஆணையம்!
திருவனந்தபுரம்: மலையால திரையுலகில் மிகப் பெரிய அளவில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாகவும், 15 பேர் அங்கு பெரிய அளவில் நாட்டாமை செய்து வருவதாகவும், இவர்களை மீறி மலையாளத் திரையுலகில் யாரும் எதுவும் செய்து விட முடியாது என்றும் நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆணைய அறிக்கையை வெளியிட கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததைத் தொடர்ந்து ஆணைய அறிக்கையை கேரள அரசு தற்போது பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத் திரையுலகில் பணியாற்றும் பெண்கள், குறிப்பாக நடிகைகள் மிகப் பெரிய அவல நிலையில் இருப்பதாக இந்த அறிக்கையில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்களுக்கு சமமான சம்பளம் தரப்படுவதில்லை. நடிகைகள் உள்பட திரையுலகம் தொடர்பான பெண்களுக்கு பல்வேறு வகையில் பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிக்க வரும் பெண்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் அல்லது சொல் பேச்சைக் கேட்க வேண்டும். பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். கேட்கும் நேரமெல்லாம் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்குமாம். இல்லாவிட்டால் அவர்களது கெரியரே காலி செய்து விடுவார்களாம்.
இதுகுறித்து ஆணையத்தின் அறிக்கையில் நீதிபதி ஹேமா கூறியுள்ளதாவது:
சினிமாவுக்கு நடிக்க வரும் பெண்களுக்கு ஆரம்ப நிலையிலிருந்தே பாலியல் அத்துமீறல்கள் தொடங்கி விடுகின்றன. சினிமாவில் நடிக்க வேண்டும் அல்லது சாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வரும் பெண்களுக்கும், சினிமா கம்பெனிகள் தேடிப் போகும் பெண்களுக்கும் தொடக்க நிலையிலிருந்தே சிக்கல்கள் தொடங்குகின்றன. அவர்களிடம் கூறப்படும் முதல் வார்த்தையே அட்ஜஸ்ட் செய்யத் தயாராக வேண்டும். எந்தவிதமான காம்ப்ரமைஸுக்கும் ரெடியாக இருக்க வேண்டும் என்பதுதான்.
இந்த இரு வார்த்தைகளையும் தாண்டி அல்லது தவிர்த்து எந்தப் பெண்ணும் திரையுலகில் தொடர்ந்து நடிக்க முடியாது. இதில் என்ன கொடுமை என்றால் எப்போதெல்லாம் கூப்பிடுகிறார்களோ அப்போதெல்லாம் இந்தப் பெண்கள் வர வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுதப்படுகிறார்கள் என்பதுதான் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மலையாளத் திரையுலிகல் பெண்களின் நிலை குறித்து ஆராய கேரள மாநில அரசு நீதிபதி ஹேமா கமிட்டியை அமைத்தது. இக்கமிட்டியில் நடிகை சாரதா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா குமாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த கமிட்டி திரையுலகம் தொடர்புடைய பெண்கள், நடிகைகள் உள்ளிட்டோரிடம் நேர்முகம் கண்டு அவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கையைத் தயார் செய்தது. நடிகை ரஞ்சனி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
2019ம் ஆண்டு நீதிபதி ஹேமா கமிட்டி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதன் பின்னர் இந்த அறிக்கையில் சில பகுதிகளை மட்டும் பகிரங்கமாக வெளியிடலாம் என்று மாநில தகவல் ஆணையம் அனுமதி அளித்தது. ஆனால் இதை எதிர்த்து தயாரிப்பாளர் சாஜிமோன் பரயில் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. ஜி. அருண் அவரது கோரிக்கையைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஆகஸ்ட் 13ம் தேதி வெளியான இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடிகை ரஞ்சனி அப்பீல் செய்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், இதில் அப்பீல் செய்ய முடியாது. தனியாக ரிட் தாக்கல் செய்யுமாறு கூறி நடிகை ரஞ்சனிக்கு உத்தரவிட்டதோடு, அறிக்கையை வெளியிட தடை இல்லை என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் தற்போது கேரள அரசு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்