மக்களுடன் முதல்வர் திட்டம்: 1598 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

Meenakshi
Feb 16, 2024,03:22 PM IST

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் இன்று 1598 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


சென்னை கலைவாணர் அரங்கில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் 1598 இளைஞர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 


விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மக்களுடன் முதல்வர் என்ற மகத்தான திட்டம். மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களுக்காக வாழ் என்பது தான் அண்ணா, கலைஞர் காட்டிய பாதை. நன்மைகளை மக்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்போம்.




திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், இல்லம் தேடி கல்வி, முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் என இப்படி எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான மக்களை மகிழ்விக்கும் திட்டமாக அமைந்துள்ளன. 


மக்களுடன் முதல்வர் திட்டத்தால் தேவையற்ற தாமதத்தை தவிர்த்தோம். அவசியம் அற்ற கேள்விகளை குறைத்தோம். மக்களுடன் முதல்வர் திட்டம் என் நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஆட்சியில் இல்லாத போது மக்களுக்காக போராடுவோம். ஆட்சியில் உள்ளபோதும் மக்களுக்காக திட்டங்களை தீட்டுவோம்.  சேவைகளை விரைவாக பெறுவதில் சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது தெரியவந்தது. சுணக்கத்தை முழுமையாக போக்க வேண்டும் என்பதற்காகத்தான் புதிய திட்டமாக மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை  தொடங்கியுள்ளோம்.


மக்கள் சிரமங்களை போக்கி அவர்களுக்கு உதவவே மக்களுடன் முதல்வர் திட்டம்  திமுக அரசால் தொடங்கப்பட்டது. அனைத்தும் நகர்ப்புறம் உள்ளாட்சி அமைப்புகள் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் 2058 முகாம்கள் நடத்தப்பட்டன. வருவாய்த்துறை இல் 42,962 பட்டா மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் 37 நாட்களில் 3.5 லட்சம் பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கோரிக்கைகள் இந்த சிறப்பு முகாம்கள் மூலம் நிறைவேற்ற மக்களிடம் நம்பிக்கை விதைக்கும் திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்திருக்கிறது. 


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது தேர்வாணனை முகாம்கள் மூலம் 27858 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.