தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இன்னும் கட்டுக்குள் வராத தீ.. 2 தீயணைப்பு வீரர்கள் மயக்கம்!

Su.tha Arivalagan
Mar 16, 2025,10:52 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீவிபத்தைத் தொடர்ந்து அங்கு 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இன்னும் தீ கட்டுக்குள் வரவில்லை. 2 தீயணைப்பு வீரர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரிந்து வருகிறது. தீயை முழுமையாக அணைக்க மேலும் பல மணி நேரங்கள் ஆகும் என்று கருதப்படுகிறது.


தூத்துக்குடியில் அனல் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இந்த அனல் மின் நிலையத்தில் ஐந்து பிரிவுகளில் இருந்து கிட்டத்தட்ட 1,100 மெகாவாட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று நள்ளிரவுக்கு மேல் கேபிள்  கேலரி என்று அழைக்கப்படக்கூடிய வயர்கள் செல்லும் முக்கிய பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதையடுத்து தீ மளமளவென பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இருப்பினும் அதிநவீன வசதிகள் இல்லாத காரணத்தால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை.  தூத்துக்குடி மட்டுமல்லாமல் பக்கத்தில் உள்ள திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. 




தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருவதால் தீயணைக்க முடியாமல் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடுமையான கரும்புகை சூழ்ந்து மக்களுக்கு பெரும் அசவுகரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களும் பல சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். மாரியப்பன் மற்றும் வெயிலுந் ராஜ் ஆகிய இரு தீயணைப்பு வீரர்கள் மூச்சு திணறால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


தீ விபத்தைத் மொத்தம் ஐந்து பிரிவுகளை கொண்ட அனல் மின் நிலையத்தில் தற்போது மூன்று பிரிவுகளில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 650 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் அளவிற்கு பெரும் சேதத்தையும் இந்த தீவிபத்து ஏற்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது. தீவிபத்து காரணமாக தூத்துக்குடி முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.