மகாவிஷ்ணு விவகாரம்.. இறுதிக் கட்டத்தில் விசாரணை.. விரைவில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

Manjula Devi
Sep 11, 2024,06:21 PM IST

சென்னை:   மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாவிஷ்ணு என்பவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அவரது பேச்சு மூட நம்பிக்கையை ஊக்கப்படுத்துவது போல உள்ளதாக கூறி தமிழ் ஆசிரியரான பார்வை மாற்றுத்திறனாளி  சங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சங்கருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மகாவிஷ்ணு. இது மேலும் சர்ச்சையானது.




இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து சர்ச்சைக்கு இடமான 2 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும் பணியிடம் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டது. அதேபோல் மகாவிஷ்ணு விவகாரம் குறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மறுபக்கம் மகாவிஷ்ணு மீது போலீஸில் புகார்கள் குவிந்தன. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்த நிலையில்  அரசுப் பள்ளியில் நடந்த விவகாரம் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை நடத்தினார். அப்போது மகாவிஷ்ணுவை பேச அழைத்தது யார் என்பதை யாருமே தெளிவாக சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நேரடியாக அனைவரையும் அழைத்து அவரும் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில் விரிவான அறிக்கை இன்னும் ஓரிரு நாளில்  தமிழக அரசிடம்  தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த அறிக்கையின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்