மகாத்மா காந்தி நினைவு நாள்: மதநல்லிணக்க உறுதி மொழி ஏற்ற உதயநிதி ஸ்டாலின்

Meenakshi
Jan 30, 2024,01:56 PM IST

சென்னை: மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளான இன்று, மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனை ஏற்று சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதி மொழி வாசித்தார்  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.


காந்தியடிகளின் 76வது நினைவு நாள் இன்று. இன்றுதான் மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சேவால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் அரசியல் படுகொலை இது என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. காந்தியடிகள் நினைவு நாளை மத நல்லினக்க நாளாக கடைபிடிக்க தமிழக  முதல்வர் உத்தரவிட்டு இருந்தார்.


இன்றைய நாளில் திமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், அனைத்து மாவட்ட தலை நகரங்களில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட கழகங்கள் நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.




அதன்படி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  அமைச்சர் கே. என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி வாசிக்க மற்ற அனைவரும்  அவற்றையே திரும்பக் கூறினர்.


காப்போம் காப்போம் மனிதநேய காப்போம். விளக்கவும் விளக்குவோம் மதவெறியை விளக்குவோம்.

காப்போம் காப்போம் வேற்றுமையில் ஒற்றுமை காப்போம். விளக்குவோம் விளக்குவோம் நமக்குள் உள்ள பிளவுகளை விளக்குவோம்.  வேரறுப்போம் வேரறுப்போம்  பிளவு படுத்தும் சக்திகளை வேரறுப்போம். 

பிறப்பொக்கும் என்பது நமக்கு அறமாகும். யாவரும் கேளிர் என்பது நமது பண்பாகும். வேண்டும் வேண்டும் அமைதியான இந்தியா வேண்டும் என்று கூறி அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.