மகா சிவராத்திரி 2024 : எந்த நேரத்தில், எப்படி வழிபட்டால் சிவனின் முழு அருளும் கிடைக்கும் ?

Aadmika
Mar 07, 2024,10:34 AM IST

சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான எட்டு விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி விரதம். சிவ பெருமானை வழிபட்டு, அவரது அருளை முழுவதுமாக பெறுவதற்கு ஏற்ற மிக முக்கியமான நாளாகும். மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தசியை மாத சிவராத்திரியாக கொண்டாடுவது வழக்கம். அதுவே மகா மாதம் என வடமொழியில் அமைக்கப்படும் மாசி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தசியை மகா சிவராத்திரி என கொண்டாடுகிறோம். சிவ பெருமான், பார்வதி தேவியை மணம் புரிந்து கொண்ட தினமே மகாசிவராத்திரி நாளாக சொல்லப்படுகிறது.


மகா சிவராத்திரி என்பத மிக உயர்வான பலனை தரும், இந்துக்களின் மிக முக்கியமான விரத நாளாகும். அதிலும் இந்த ஆண்டு வரும் மகாசிவராத்திரி மிகவும் அபூர்வமானதாகும். 2024ம் ஆண்டில் மகா சிவராத்திரி திருநாள் மார்ச் மாதம் 08ம் தேதி வருகிறது. பெண்மையை போற்றும் சர்வதேச மகளிர் தினத்தன்று, முதன் முதலாக சக்திக்கு தனது உடலில் சரிபாதியை கொடுத்து பெண்ணிற்கு சம உரிமை அளித்த சிவனுக்குரிய விரத நாளாகும் இணைந்து வருவது மிக விசேஷமானதாகும். அது மட்டுமல்ல, சிவனுக்குரிய மற்றொரு மிக முக்கிய விரத நாளான பிரதோஷமும் இந்த நாளில் இணைந்து வருகிறது. பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷத்தை சுக்கிர வார பிரதோஷம் என சிறப்பாக சொல்வதுண்டு. சுக்கிர வார பிரதோஷம், மகா சிவராத்திரி நன்னாளில் வருகிறது மிக அபூர்வமானதாகும். கிட்டதட்ட 300 ஆண்டுகளுக்கு பிறகு இது போல் வருவதால் இது அபூர்வ சிவராத்திரியாக கருதப்படுகிறது.




மகா சிவராத்திரி என்றாலே சிவ பெருமானை நினைத்து விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவன் கோவில்களில் இரவு முழுவதும் நடக்கும் சிவ பூஜையில் பங்கேற்க வேண்டும். அதனால் மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மார்ச் 08ம் தேதி காலை எழுந்தது முதலே விரதத்தை துவங்கி விட வேண்டும். அன்று நாள் முழுவதும் உணவு உண்ணாமலும், உறங்காமலும் இருக்க வேண்டும். இடைவிடாது சிவ மந்திரங்களை உச்சரித்தபடி சிவ சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்க வேண்டும். மாலையில் சிவன் கோவில்களில் நடக்கும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.


மார்ச் 08ம் தேதி இரவு 08.19 மணிக்கு பிறகே சதுர்த்தசி திதி துவங்குகிறது. அதற்கு பிறகே மகா சிவராத்திரி பூஜை துவங்கும். மொத்தம் நான்கு கால பூஜைகள் நடைபெறும். இதில் முதல் காலத்தில் பிரம்மாவும், 2ம் காலத்தில் விஷ்ணுவும், 3ம் காலத்தில் அம்பிகையும், 4ம் காலத்தில் தேவர்களும் ரிஷிகளும் சிவபெருமானை வழிபட்ட காலமாகும். இந்த நான்கு கால பூஜை முடிந்த பிறகு கோவில்களில் தரப்படும் பிரசாதத்தை சாப்பிட்டு, பட்டினி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு மார்ச் 09ம் தேதி பகல் முழுவதும் தூங்காமல், மாலை வீட்டில் விளக்கேற்றி சிவனை வழிபட்ட பிறகு, இரவு 7 மணிக்கு பிறகே தூங்க செல்ல வேண்டும்.



மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் ஏதாவது ஒரு கால பூஜையில் மட்டும் கலந்து கொண்டு சிவனை வழிபடலாம். அந்த சமயத்தில் ஒரே ஒரு வில்வ இலையாவது படைத்து சிவனை வழிபட வேண்டும். மூன்றாம் கால பூஜையான இரவு 11.45 முதல் 12.15 வரை நடைபெறும் பூஜையின் போது கண்டிப்பாக கண் விழித்து சிவ வழிபாடு செய்ய வேண்டும். பார்வதி தேவி சிவனை வழிபட்ட இந்த காலத்திற்கு லிங்கோத்பவ காலம் என்ற பெயர். அடி முடி காண முடியாத லிங்கோத்பவராக சிவபெருமான் காட்சி தந்த காலமாகும். இந்த நேரத்தில் கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்தால், மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபட்ட பலனை பெற்று விடலாம்.