மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகிறார் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்.. டிச. 5ல் பதவியேற்பு
மும்பை : மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பாஜக.,வின் தேவேந்திர பட்நாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 05ம் தேதி மகாராஷ்டிர கவர்னர் மாளிகையில் இவர் முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. இதில் பாஜக 132 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன. இருந்தாலும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளில் எந்த கட்சியை சேர்ந்தவரை முதல்வராக தேர்வு செய்வது என்பதில் நீண்ட குழப்பம் நீடித்து வந்தது.
கடந்த ஒரு வாரமாக நீண்ட, பல கட்ட பேச்சுவார்த்தை, ஆலோசனைகளுக்கு பிறகு ஒரு வழியாக தற்போது முதல்வர் யார் என்பது குறித்த தேர்வு நடந்து முடிந்துள்ளது. பாஜக சேர்ந்தவர் தான் முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாகவும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் அஜீத் பவார் ஏற்கனவே கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று மகாராஷ்டிர வித்யா பவனில் நடைபெற்ற பாஜக ஆலோசனை கூட்டத்தில் தேவேந்திர பட்நாவிசை மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேர்வு செய்துள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டிசம்பர் 05ம் தேதி நடைபெற உள்ள விழாவில் தேவேந்திர பட்நாவிஸ் மகாராஷ்டி முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட்டணி கட்சிகளான சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் தங்கள் கட்சிகளை சேர்ந்த யாருக்கு துணை முதல்வர் பதவியை வழங்க முடிவு செய்துள்ளன என்ற அறிவிப்பை இதுவரை வெளியிடப்படவில்லை. நாளை மகாராஷ்டிராவின் புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்ட பிறகு, இது துணை முதல்வர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிகிறது. புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.
இதுவரை வெளியான தகவல்களின் படி, முதல்வர் பதவி கிடைக்காவிட்டாலும், அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் முக்கிய இலாக்காக்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள பாஜக கேட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் நிதி, பொதுப்பணித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகள் பாஜக வசமே இருக்கும் என சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்