தாக்கரேக்கள் ஒண்ணா சேரப் போறாங்களா? .. மகாராஷ்டிரா அரசியல் களத்தில் புதிய பரபரப்பு!
மும்பை: மகாராஷ்டிரா அரசியல்ல திடீர்னு ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது. சிவசேனாவின் ஒரு பிரிவு தலைவரான உத்தவ் தாக்கரேவும், மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் மறுபடியும் ஒண்ணா சேரப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது. இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இரு முனைகளாக தற்போது செயல்பட்டு வரும் இந்த இரு தாக்கரேக்களும் இணைந்தால், மகாராஷ்டிரா அரசியல் களமே மாறிப் போகும்னு சொல்றாங்க.
மறைந்த சிவசேனா் தலைவர் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே. பால் தாக்கரேவின் சகோதரி மகன்தான் ராஜ் தாக்கரே. பால் தாக்கரே இருந்தவரை இருவரும் இரு கரங்கள் போல அவருக்கு உதவியாக அரசியலில் ஈடுபட்டிருந்தனர். பால் தாக்கரேவின் வாரிசாக ராஜ் தாக்கரேதான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உத்தவ் தாக்கரே திடீரென விஸ்வரூபம் எடுத்ததால் அதிருப்தி அடைந்த ராஜ் தாக்கரே, தனியாக பிரிந்து சென்று விட்டார்.
சிவசேனாவை தலைமை தாங்கி நடத்தி வந்தார் உத்தவ் தாக்கரே. ஆனால் ஏக்நாத் ஷிண்டேவை வைத்து சிவசேனாவை இரண்டாக உடைத்து விட்டது பாஜக. மேலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையமும் அறிவித்து விட்டது. இதனால் பின்னடைவில்தான் இருக்கிறார் உத்தவ் தாக்கரே.
இந்த நிலையில் சமீப காலமாக மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு குறித்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்தி திணிப்பை ராஜ் தாக்கரே கடுமையாக எதிர்த்தும், எச்சரிக்கை விடுத்தும் வருகிறார். மேலும் தமிழ்நாட்டை உதாரணமாக காட்டி தமிழ்நாடு போல, தமிழர்கள் போல மராத்தியர்களும் இந்திக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கோரி வருகிறார். சிவசேனாவின் உண்மையான பலமே இந்த மராத்தி பெருமைதான். அதை தற்போது ராஜ் தாக்கரே கையில் எடுத்திருக்கிறார். அவரைப் போலவே உத்தவ் தாக்கரேவும் இந்தித் திணிப்புக்கு எதிராக பேச ஆரம்பித்திருக்கிறார். இந்தப் பின்னணியில்தான் இரு தாக்கரேக்களும் ஒன்றிணையப் போவதாக ஒரு டாக் கிளம்பியுள்ளது.
சரி இதுகுறித்து மற்ற கட்சிகள் என்ன சொல்றாங்க?
பாஜக தரப்பில் இதுகுறித்து வரவேற்பும் தெரிவிக்கவில்லை, எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக, "எங்களுக்கென்ன, சேர்ந்துட்டுப் போகட்டும்" என்ற அளவில் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இதை உற்சாகமாக வரவேற்றுள்ளது. தங்களது அணிக்கு பலம் கிடைக்கும் என்பது காங்கிரஸின் எதிர்பார்ப்பு. தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட இதுகுறித்து மகிழ்ச்சியே அடைந்துள்ளது.
மும்பை மாநகராட்சி தேர்தல் வரவுள்ள நிலையில் இரு தாக்கரேக்களும் இணைந்தால் அது மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என்று காங்கிரஸ் கூட்டணி எதிர்பார்க்கிறது. பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும் அது கருதுகிறது.
ராஜ்தாக்கரேவின் கருத்து என்ன?
உத்தவ் தாக்கரே குறித்தும் அவரது கட்சி குறித்தும் ராஜ் தாக்கரே கூறுகையில், எங்க ரெண்டு பேருக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடு தான். ஒண்ணா சேர்றது நம்ம மனசுல இருந்தா போதும் என்று அவர் கருத்து கூறியுள்ளார். இதன் மூலம் இணைப்புக்கு வாய்ப்பிருப்பதாக அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளதாக கருதப்படுகிறது.
மறுபக்கம், மகாராஷ்டிராவுக்கு எதிரா யார் செயல்பட்டாலும், அவங்கள ஆதரிக்க மாட்டேன் என்று உத்தவ் கூறியிருக்கிறார். இதன் மூலம் மராட்டிய பெருமையைக் காக்க குரல் கொடுத்து வரும் ராஜ் தாக்கரேவுடன் இணைய தனக்குப் பிரச்சினை இல்லை என்பதை உத்தவ் உணர்த்தியிருப்பதாக தெரிகிறது.
இது நடந்தா, மகாராஷ்டிரா அரசியல்ல பெரிய மாற்றம் வரும்னு சொல்றாங்க. ஆனா, இன்னும் சிலர் என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்னு சொல்றாங்க.
இதற்கிடையே, ஒரு வேளை தாக்கரேக்கள் இணைந்து மராத்தி பெருமைக்கு ஆதரவாக உரத்துக் குரல் எழுப்ப ஆரம்பித்தால் அது பாஜகவை விட ஏக்நாத் ஷிண்டே கட்சிக்குத்தான் பெரும் சவாலாக மாறும். காரணம், மராத்திக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே பேச முடியாது. இந்தித் திணிப்பை ஆதரிக்கவும் முடியாது. அதே நிலைதான் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்படும். எனவே இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்தும் பொறுப்பு அவர்களுக்கு வந்து சேரும். ஆனால் பாஜக அதை ஏற்குமா என்று தெரியவில்லை.
எனவே வரும் நாட்களில் மகாராஷ்டிர அரசியலில் பல்வேறு பரபரப்புகள், திருப்பங்கள், அதிரடிகளுக்கு வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.