Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
மும்பை: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இரு பெரும் கட்சிகளுக்கு கிட்டத்தட்ட முடிவுரையே எழுதி விட்டது. அந்த முடிவரையை எழுதியுள்ளவர்கள் ஏக்நாத் ஷிண்டேவும், அஜீத் பவாரும்.
இதுகாலம் வரை மகாராஷ்டிர அரசியலில் கோலோச்சி வந்த சரத் பவாரும், உத்தவ் தாக்கரேவும் மிகப் பெரிய தோல்வியை மகாராஷ்டிராவில் சந்தித்துள்ளனர். அவர்களிடமிருந்து பிரிந்து சென்று பாஜக உதவியுடன் ஆட்சியமைத்த ஏக்நாத் ஷிண்டேவும், அஜீத் பவாரும் சேர்ந்து அவர்களது அரசியல் வாழ்க்கைகைக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும்தான் மிகவும் வலுவான கட்சிகளாக வலம் வந்து கொண்டிருந்தன. இவர்களுடன் கூட்டணி வைத்துத்தான் காங்கிரஸோ அல்லது பாஜகவோ ஆட்சியமைக்கும். இதுதான் வரலாறாக இருந்து வந்தது. பால் தாக்கேராவால் உருவாக்கப்பட்டது சிவசேனா கட்சி. அதேபோல காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத் பவார் தொடங்கினார்.
கடந்த 2019 சட்டசபைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றனர். ஆனால் அரசமைப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் முடிவுகள் வெளியாகி நெடு நாட்களாக அரசமைக்க முடியாமல் திணறி வந்தனர். இதையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2019, நவம்பர் 23ம் தேதி பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த அஜீத் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்று அதிர்ச்சி அளித்தனர். ஆநால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பலம் இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே இருவரும் பதவி விலகினர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் - சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவியேற்றது. உத்தவ் தாக்கரே முதல்வரானார்.
ஆனால் இந்த அரசு நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2022ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி உத்தவ் தாக்கரே கட்சியை உடைத்துக் கொண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி வெளியேறியது. இதனால் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்தது. உத்தவ் தாக்கரே பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று புதிய கூட்டணி அரசு அமைந்தது. இதில் அஜீத் பவாரும் பின்னர் இணைந்தார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இணைந்திருந்தனர். அதேபோல அஜீத் பவார் தேசியவாத காங்கிரஸிலும் கணிசமானோர் இணைந்திருந்தனர். இவர்களையே அதிகாரப்பூர்வ கட்சிகளாக தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது. இந்தப் பின்னணியில்தான் தற்போதைய தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டேவையும், அஜீத் பவாரையும் மக்கள் நிராகரிப்பார்கள் என்று உத்தவ் தாக்கரே, சரத் பவார் தரப்பு திட்டவட்டமாக கூறி வந்தது. இதனால் பெரும் எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.
ஆனால் இவர்களது நம்பிக்கையை மகாராஷ்டிர மக்கள் தகர்த்து தரைமட்டமாக்கி விட்டனர். ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவையும், அஜீ பவாரின் தேசியவாத காங்கிரஸையுமே மக்கள் அங்கீகரித்து வாக்களித்துள்ளனர். இந்தத் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் 41 இடங்களிலேயே இக்கட்சி வென்றிருந்தது. கூடுதலாக 14 இடங்களை இக்கட்சி கைப்பற்றியுள்ளது. அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 37 இடங்கள் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலை விட இது 4 இடங்கள் குறைவாகும். மறுபக்கம் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சிக்கு வெறும் 20 இடங்களே கிடைத்துள்ளன. கடந்த தேர்தலை விட இது 5 தொகுதிகள் அதிகம் என்பதுதான் ஒரே ஆறுதல். சரத் பவார் தேசியவாத காங்கிரஸுக்கு 13 இடங்களே கிடைத்துள்ளன. கடந்த தேர்தலிலும் இதே அளவிலான வெற்றிதான் இக்கட்சிக்குக் கிடைத்திருந்தது.
காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் பெரும் தோல்வியே கிடைத்துள்ளது. கடந்த முறை 44 எம்எல்ஏக்களைப் பெற்றிருந்த அக்கட்சி இம்முறை 19 தொகுதிகளில் மட்டுமே வென்று அதிர்ச்சிகரமான பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவையும், அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸையும் மகாராஷ்டிர மக்கள் அங்கீகரித்துள்ளதாகவே கருதப்படுகிறது. இது உத்தவ் தாக்கரேவுக்கும், சரத் பவாருக்கும் மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்