"வீட்ல என்னைய கல் தூக்க அனுமதிக்கவே இல்லை.. ஆனாலும் போராடி சாதிச்சேன்".. அசத்திய "தங்கம்"!
- பொன் லட்சுமி
இன்றைய நவீன உலகில் பெண்கள் சாதனை படைக்காத துறைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களின் சாதனையும் போற்றப்படுகிறது, ஊக்கப்படுத்தப்படுகிறது.
வீட்டோடும், சமையல் கட்டோடும் முடங்கிப் போயிருந்த பெண்கள், இன்று சேலையை வரிந்து கட்டிக் கொண்டு வரிசையாக சாதனைகளைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஆண்கள் செய்யும் எதையும் எங்களாலும் செய்ய முடியும்.. அதை விட சிறப்பாகவே சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
விளையாட்டில் எத்தனையோ பெண்கள் இன்று முத்திரை பதித்துக் கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட விளையாட்டுகளில் ஒன்றுதான் இந்த இளவட்டக் கல் தூக்குவது... வழக்கமாக இளவட்டக் கல்லை ஆண்கள்தான் தூக்குவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால், உடல் உறுதி கொண்டு இருக்கும் ஆண்களை விட மன உறுதி அதிகம் உள்ள பெண்கள் எப்போதும் சிறப்பானவர்கள் தான்.. அந்த வகையில் காலம் காலமாக ஆண்கள் மட்டுமே இளவட்ட கல் தூக்கும் போட்டியில் பெண்களும் சாதிக்கலாம் என்று சாதித்து காட்டிக் கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்கு அருகே உள்ள வடலிவிளை என்னும் கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் 50 கிலோ இளவட்ட கல்லை தூக்கி அசத்தினர்.... எந்தப் பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத உருளை வடிவத்தில் இருக்கும் கல்லை சர்வசாதாரணமாக தூக்கி பெண்கள் தங்கள் உடல் பலத்தை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர்தான், வடலிவளையைச் சேர்ந்த தங்கபுஷ்பம். இவர் வடலிவிளையோடு நிற்கவில்லை.. மாநிலம் தாண்டி தெலங்கானா வரை போய் பிரைஸ் அடித்து அசத்தியவர்.. மகளிர் தினம் வருவதையொட்டி இந்த வீராங்கனையிடம் ஒரு ஸ்பெஷல் பேட்டி கேட்டோம்.. அது உங்களுக்காக.
எத்தனை வருஷமா இப்படி கல் தூக்கும் சாகசத்தை பண்ணிட்டு இருக்கீங்க?
கடந்த நாலு வருடமாக போட்டியில் கலந்து கொண்டு கல் தூக்கி வருகிறேன்.
வீட்டில் இதற்கு ஒத்துழைப்பு எப்படி தராங்க ?
வீட்ல முதலில் வேண்டாம் என்று தான் சொன்னாங்க... பெண்கள் கல் தூக்குவதால் உடம்பில் பல்வேறு பிரச்சனைகள் வரும், கர்ப்பப்பை இறங்கிவிடும் என்று சொன்னாங்க.. பெண்கள் கல் தூக்குவதால் நாலு பேரு நாலு விதமா சொல்லுவாங்க அதனால வேண்டாம் அப்படின்னு சொன்னாங்க... ஆனால் நான் என்ன ஆனாலும் பரவாயில்லை, ஒருவாட்டி தூக்கிப் பார்க்கிறேன் அப்படின்னு சொல்லி தான் தூக்கினேன்... அதுல எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது...
இதுக்காக எப்படி பிராக்டிஸ் பண்ணுவீங்க ?
பொங்கலுக்கு பத்து நாள் முன்னாடி கல்லை தூக்கி பிராக்டீஸ் பண்ணுவோம்.
இதுக்காக விசேஷமா ஏதும் சாப்பிடுவீங்களா?
அப்படி எதுவும் விசேஷமா சாப்பிடல. நார்மலா எல்லாரும் மாதிரி தான் சாப்பிடுவோம்.
இப்படி கல் தூக்குவதால் உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது?
ஆண்கள் பெண்கள் அனைவரும் சுற்றி நின்று கைதட்டும் போது சந்தோசமாகவும் இருக்கு.. ரொம்ப உற்சாகமாகவும் இருக்கும்.
இது போன்ற விளையாட்டுகளுக்கு ஊக்குவிக்க அரசு தரப்பில் ஏதாவது செய்யணும்னு நினைக்கிறீங்களா?
கண்டிப்பா, பெண்களுக்கு எவ்வளவோ விளையாட்டு போட்டிகள் இருக்கிறது... கபடி, கிரிக்கெட், ஹாக்கி டென்னிஸ் அது போன்ற விளையாட்டுகள் எல்லாம் பெண்களின் திறமையை மட்டுமே காட்டும். ஆனால் இது போன்ற விளையாட்டுக்கள் பெண்களின் வீரத்தையும் காட்டும்... ஆண்களுக்கான ஜல்லிக்கட்டு போட்டியை அரசு ஏற்று நடத்துவது போல்... பெண்களுக்கும் இது போன்ற வீர விளையாட்டுகளை அரசு ஏற்று நடத்தினால் நன்றாக இருக்கும் என்பது என் கணிப்பு.
மாவட்ட அளவில் இதுக்கு போட்டிகள் இருக்கா நீங்க அதுல கலந்து இருக்கீங்களா ?
எங்கள் ஊரில் நடைபெற்ற விளையாட்டு போட்டியை சமூக வலைத்தளத்தில் பார்த்துவிட்டு தெலுங்கானாவில் தெலுங்கு வருடப்பிறப்பு அன்று எங்களை விளையாட அழைத்திருந்தார்கள்... ஆண்கள் மட்டுமே பங்கேற்ற இந்த போட்டியில் பெண்கள் நாங்கள் மூன்று பேர் கலந்து கொண்டு பரிசையும் வென்றோம்.. அந்த நிகழ்ச்சி மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இளவட்ட கல் தூக்குவது அந்த காலத்தில் பெண்களை திருமணம் செய்வதற்காக, ஆண்களுக்காக உருவாக்கப்பட்டது. இப்போது பெண்களும் தூக்குகிறார்கள். இது என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குன்னு நினைக்கிறீங்க ?
ஆண்கள் பெண்கள் இருவருமே சமம் என்ற நிலை உருவாகிவிட்டது... ஆண்களுக்கு நிகராக பெண்களுமே எல்லாத் துறைகளிலும் சாதிக்கிறார்கள்... வீரம் என்பது ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் இருக்கிறது ஆனால் அதை எல்லா பெண்களும் வெளிக்கொண்டு வருவது இல்லை... வெளிக்கொண்டு வருபவர்கள் ஜெயிக்கிறார்கள்.
பெண்களால் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை என்பதை கடந்த பல வருஷமாக பெண்கள் நிரூபிச்சுட்டு வராங்க. இந்த மகளிர் தினத்தன்று பெண்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
பெண்களால் முடியாத காரியம் என்று எதுவுமே இல்லை..ஒரு காலத்தில் பெண்கள் என்றால் வீட்டு வேலை செய்வதற்கும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் மட்டும்தான் என்ற நிலை இருந்தது... ஆனால் இன்று பெண்கள் கால் வைக்காத துறைகளே இல்லை என்னும் அளவிற்கு உயர்ந்து விட்டார்கள்.. முதலில் பெண்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும். என்னால் முடியும் என்ற நம்பிக்கை என்று வருகிறதோ அன்றுதான் அவர்கள் உண்மையாக ஜெயித்ததற்கு அர்த்தம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு திறமைகள் இருக்கிறது. அதை அவர்கள் தான் முதலில் வெளி கொண்டு வர வேண்டும். அடுத்தவங்க அத சொல்லுவாங்க இத சொல்லுவாங்கன்னு நினைச்சு நமக்கு புடிச்ச விஷயத்தை செய்யாம விட்டோம்னா நம்மளால என்னைக்கும் ஜெயிக்க முடியாது.
எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு திறமை இருக்கும்.. அதை சரியாக கண்டறிந்து, உரிய நேரத்தில் அதை வெளிக் கொணர்ந்து விட்டால், அவர்களைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியாது. ஒவ்வொருவருக்குள்ளும் தங்கபுஷ்பம் போன்ற சாதனையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவரை அவர் அடையாளம் கண்டு கொண்டு விட்டார்.. நீங்களும் உங்களது "ஒரிஜினலை" வெளிக் கொண்டு வாருங்கள்!