மதுரை டங்ஸ்டன் சுரங்கம்: சட்டசபையில் முதல்வர் - துரைமுருகன் - எடப்பாடி பழனிச்சாமி கடும் வாதம்!

Su.tha Arivalagan
Dec 09, 2024,05:45 PM IST

சென்னை: மதுரையில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. முன்னதாக சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது.


மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி அருகே உள்ள நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பது தொடர்பான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்திற்கே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 




இந்த சுரங்கத்தை அமைக்கக் கூடாது என்றும் அனுமதி வழங்கிய மத்திய அரசைக் கண்டித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தனித் தீர்மானம் ஒன்றை இன்று கொண்டு வந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:


மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இத்தகைய இன்றியமையாத மற்றும் முக்கியக் கனிமங்களுக்கான உரிமங்களை மாநில அரசுகளின் அனுமதியின்றி, ஒன்றிய அரசு ஏலம் விடக்கூடாது என்று கடந்த 3.10.2023 அன்று, தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருந்தும், இந்த எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாது, ஒன்றிய அரசு இத்தகைய ஏல நடவடிக்கையை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.


இந்த டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரைக் கோயில்கள், சமணச் சின்னங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துக்கள், பஞ்சபாண்டவர் படுகைகள் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கியதாகவும், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இப்பகுதி ஒரு பல்லுயிர்ப் பெருக்கத் தலமாக, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நிலையிலும், அப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமம் ஒன்றிய அரசால் அளிக்கப்பட்டுள்ளதை, தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும், ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.


இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வை ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதால், அப்பகுதி மக்கள் இதனை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இப்பகுதியையும், இப்பகுதியில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஒப்பந்தம் வழங்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கைவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியப் பிரதமர் அவர்களை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார்கள்.


இந்தச் சூழ்நிலையில், மதுரை மாவட்டம், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக இரத்து செய்திடவும், மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்தச்சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்றும், ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்தப் பேரவை ஒருமனதாக தீர்மானிக்கிறது என்று கூறப்பட்டிருந்தது.


பின்னர் இதன் மீது விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி கடும் ஆவேசமாக பேசினார். உரக்கக் குரல் எழுப்பியபடி அவர் பேசினார். திமுக கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் தராதது ஏன் என்றும் அவர் வினா எழுப்பினார். அவரது ஒவ்வொரு கேள்விக்கும் முதல்வரும், அமைச்சர் துரைமுருகனும் மாறி மாறி எழுந்து பதிலளித்தபடி இருந்தனர். ஒரு கட்டத்தில் முதல்வர் பேசுகையில், அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்கும் நிலை வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன் என்று கோபமாக கூறினார்.


ஒரு கட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக, எடப்பாடி பழனிச்சாமி போலவே சத்தம் போட்டு பேசியதால் மேலும் பரபரப்பானது. இப்படி அனல் பறக்க நடந்த விவாதத்தின் இறுதியில், தீர்மானத்தை ஆதரிப்பதாக அதிமுக அறிவித்தது. இதைத் தொடர்ந்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்