"திக்... திக்..".. அதிகாலையில் டீ போட்டபோது.. அதிர வைத்த மதுரை ரயில் விபத்து பின்னணி!

Su.tha Arivalagan
Aug 26, 2023,11:28 AM IST

மதுரை: மதுரை ரயில் நிலைய தீவிபத்தில் நடந்தது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


டீ தயாரிப்பதற்காக அடுப்பைப் பற்ற வைத்து அந்த ஏற்பாடுகளில் இறங்கியபோதுதான் தீ விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தின்போது அந்தப் பெட்டியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இது முழுக்க முழுக்க ஆன்மீக சுற்றுலாவாக வந்த பயணிகளின் தவறால் நடந்த கொடூர விபத்தாகும்.


உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் இந்த சுற்றுலா ரயில் கடந்த 17ம் தேதி லக்னோவிலிருந்து கிளம்பியது. இன்று அது மதுரை வந்து சேர்ந்தது. அதிகாலையில் மதுரை வந்த அந்த ரயில் தனி டிராக்கில் நிறுத்தப்பட்டிருந்தது. காலை உணவுக்குப் பின்னர் ராமேஸ்வரம் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.


இந்த நிலையில் அதிகாலை 5.30 மணிக்கு அந்த ரயிலின் ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்து நாசமானது. முழுப் பெட்டியும் தீயில் எரிந்து போய் விட்டது. மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் பெண்கள் ஆவர்.  பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்பதுதான் வேதனையானது. காயமடைந்தவர்களை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே துறையினர் விசாரித்து வருகின்றனர். 




இந்த நிலையில் அந்த ரயிலில் பயணித்த பயணிகள் சிலர் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஒருவர் கூறுகையில் உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா பயணத்திற்கு வந்தவர்கள்  சிலர் சிலிண்டர், மூன்று அடுக்கு விறகுகள் மற்றும் சமையல் பாத்திரங்களை கொண்டு வந்தனர். அந்தப் பொருட்களைக் கொண்டு அதிகாலை 5 மணி அளவில் தேநீர் தயாரித்த போது சிலிண்டர் வெடித்தது. நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென பெரிய சத்தம் கேட்டதால் அலறி அடித்து எழுந்தோம். தீ பிடித்து எரிவதைப் பார்த்து பெட்டியிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினோம்.


டாய்லெட்டில் விறக்குக் கட்டைகள்


கொண்டு வந்த விறகுக் கட்டைகளை கழிப்பறைக்குள் அடுக்கி வைத்திருந்ததாக தகல்கள் கூறுகின்றன. இவையும் சேர்ந்து எரிந்ததால்தான் பெரிய விபத்து ஏற்பட்டு விட்டது. 


தீப்பிடித்து எரிந்த பெட்டியில் 60 பேருக்கு மேல் இருந்தனர். யாரும் வெளியே வர முடியாமல் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் பலரும் உள்ளே சிக்கிக் கொண்டனர் என்றார். வட மாநிலங்களில் ரயில்களுக்குள் கொள்ளையர்கள் புகுந்து விடுவது சகஜமானது. அதனால் பெரும்பாலும் பெட்டிகளின் கதவுகளை மூடி விடுவார்கள். இதனால்தான் பலர் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொள்ள நேரிட்டு விட்டது.


மதுரை ரயில் தீவிபத்து.. ரயிலுக்குள் பயணிகள் சமைத்ததால் விபரீதம்.. பலி எண்ணிக்கை 10 ஆனது


ரயில்வே விதிமுறைப்படி, ரயிலில் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் மற்றும் வெடிக்கும் உபகரணங்களை எடுத்துச் செல்லக்கூடாது. இந்த ரயிலிலும் கூட பயணிகளிடம் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல மாட்டோம் என்று ஏற்கனவே எழுதி வாங்கியுள்ளனர். அதையும் மீறி இவர்கள் காஸ் சிலிண்டர், சமையல் பாத்திரம் உள்ளிட்டவற்றை எட��த்து வந்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பயணிகள் இதுபோல பொறுப்பற்று நடந்து கொள்வதால் பல மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. 

    

தமிழ்நாடு அரசு - ரயில்வே  நிதியுதவி அறிவிப்பு


மதுரை ரயில் நிலைய தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  அதேபோல தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.