54 வருடங்களில் இல்லாத கனமழை.. தூக்கம் தொலைத்த தூங்கா நகரம் மதுரை.. முதல்வர் பிறப்பித்த உத்தரவு!

Manjula Devi
Oct 26, 2024,10:36 AM IST

மதுரை: மதுரையில் நேற்று பெய்த திடீர் பெருமழையால் பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


இரண்டு மணி நேரத்தில் மட்டுமே 8 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்த நிலையில், சாலைகள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் மதுரை மாவட்ட  அதிகாரிகள்.




இன்று காலை செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் சுற்றிப் பார்த்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டனர். மதுரையின் சில பகுதிகளில் இன்னும் நீர் வடியாமல் உள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் இரவில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. 


அதிலும்  மதுரை மாநகரில் 2 மணி நேரத்திலேயே சுமார் 8 சென்டிமீட்டர் கனமழை பதிவானளது. இதனால் மதுரை மாநகரின் பல பகுதிகள் மழை நீரால் ஸ்தம்பித்தது. செல்லூர், ஆத்திகுளம், புதூர், சர்வேயர் காலனி, முல்லை நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த கன மழையால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. செல்லூரில் மட்டும் பெய்த கனமழையின் எதிரொலியாக சாலையில் தேங்கிய நீர் படிப்படியாக குடியிருப்புக்குள் புகுந்து வீட்டில் உள்ள கட்டில் மூழ்கும் அளவுக்கு மழைநீர் அதிகரித்தது.


இதனால் அத்தியாவசிய பொருட்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் தண்ணீரில் மூழ்கின. அதேபோல் கனமழை காரணமாக புளியங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் ஆத்திகுளம் நகர் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். 


54 வருடங்களில் இல்லாத மழை




மதுரையில் தற்போது சாலை மற்றும் மேம்பால பணி காரணமாக ரோடுகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. அதேபோல் தெருக்கள் உள்ள சாலைகளும் கடும் சேதத்தை சந்தித்து வருகின்றன. இதனால் மழைநீர் அப்பகுதிகளை முழுவதும் ஆக்கிரமித்து வருவதால் சாலைகளில் எங்கு பள்ளம் எங்கு மேடு இருப்பதே தெரியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பள்ளத்தில் விழுந்து சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. 


நேற்று மதுரை மாநகரில் பிற்பகல் 3 மணிக்கு பிடித்த மழை,15 நிமிடத்தில் 4.5 சென்டிமீட்டர் அளவுக்கு வெளுத்து வாங்கியது. இதனால் கால் மணி நேரத்திலேயே சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் ஆக்கிரமிக்க தொடங்கியது. மதுரையில் கடந்த 1970 ஆம் ஆண்டு 99 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதன் பிறகு, 54 வருடங்களுக்குப் பிறகு நேற்றுதான், அக்டோபர் மாதத்தில் 99.5 மில்லி மீட்டர் அதிக மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மதுரையிலும் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும்  கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் வைகை ஆறு நகருக்குள்ளேயே ஓடுகிறது. எனவே இரு கரைகளிலும் மழை நீர் வடிகால்களை முறைப்படுத்தி மழை நீரை ஆற்றுக்குள் வந்து விழமாறு வசதிகள் செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் வெள்ளம் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க முடியும் என்று நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு முறையான திட்டங்கள் தேவை. சென்னைக்கு எப்படி பல்வேறு வழிகளில் மழை நீர் வடிகால் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறதோ அதேபோன்ற திட்டங்கள் மதுரை போன்ற பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டிய கட்டாயம் தற்போது வந்து விட்டதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


முதல்வர் பிறப்பித்த உத்தரவு


முன்னதாக, மதுரையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். உடனடியாக அனைவரும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு முன்னதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசனும் இதுதொடர்பாக சில எக்ஸ் தள பதிவுகளை வெளியிட்டிருந்தார்.


இதையடுத்து  மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


முதல்வர் சொல்ல வேண்டும் என்று காத்திருக்காமல், அதிகாரிகள் முன்கூட்டியே தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். மதுரையில் கடந்த சில நாட்களாகவே  மழை பெய்து வருகிறது. கன மழையாக இது இருந்து வருகிறது. இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மழை நீர் ஆற்றில் வந்து விழும் வகையிலான கால்வாய்களில் சரியாக தூரவாறப்படாமல் இருக்கலாம் என்று தெரிவித்தார். எனவே முன்கூட்டியே இதுபோன்ற பணிகளை அதிகாரிகள் செய்து முடித்திருக்க வேண்டும். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அதிகாரிகள் இன்னும் சுதாரிப்பாக இருந்திருக்க வேண்டும். மக்கள் அவதிப்படுவதற்கு நாம் வழி வகுத்து விடக் கூடாது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.


இத்தனை பேர் இருந்துமா இப்படி?




மதுரை மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள் உள்ளனர். 100 கவுன்சிலர்கள் கொண்ட மிகப் பெரிய மாநகராட்சி நிர்வாகம் இருக்கிறது, மேயர் இருக்கிறார். 10 எம்எல்ஏக்கள் இந்த மாவட்டத்தில் உள்ளனர். அதில் 5 எம்எல்ஏக்கள் மதுரைக்குள்ளேயே உள்ளனர். இத்தனை பேர் இருந்தும், மதுரையில் இந்த அளவுக்கு வெள்ளம் சூழ்ந்தும் கூட உடனடியாக யாரும் சுதாரிக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று, தென் தமிழகத்தின் மிக முக்கியமான நகரம் இப்படி பல பெருமைகள் இருந்தும் கூட இந்த நகரம் அதற்குரிய முக்கியத்துவத்தைப் பெறத் தவறியது ஏன் என்று தெரியில்லை. வருங்காலத்திலாவது இந்த நிலை மாற வேண்டும்.


மிகவும் திறமை வாய்ந்த அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் அடங்கிய உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்து மதுரை மாநகரின் வெள்ளத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு குறித்து விரிவான திட்டமிடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். காரணம், எதிர்காலத்தில் இது தேர்தல் பிரச்சினையாகவும் உருவெடுக்கும் அபாயம் உள்ளது. அதைத் தவிர்க்க மின்னல் வேக நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியது அவசியமாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்