கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி.. கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மதுரை கலெக்டர் உத்தரவு

Meenakshi
May 02, 2024,02:28 PM IST

மதுரை:  கல்குவாரியில் நடந்த வெடிவிபத்து எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் அருகே ஆர்எஸ்ஆர் கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் உள்ள பாறைகளை உடைக்க பயன்படுத்துவதற்காக வெடி பொருட்கள் இறக்கப்பட்டது. அந்த வெடி பொருட்கள் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் வெடி பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த  தொழிலாளர்கள் 3 பேர் உடல் சிதறி இறந்தனர். 




இந்நிலையில், இக்கல்குவாரியின் பங்குதாரரான ஆவியூரை சேர்ந்த சேது என்பவர் ஆவியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கல்குவாரியின் உரிமையாளரான ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். வெடி விபத்தில் உயரிழந்த 3 பேரின் குடும்பத்தினர்களுக்கு கல்குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவராணமாக வழங்கப்பட்டது. இதில் 50,000 ரூபாய் ரொக்கமாகவும், மீதமுள்ள 11.5 லட்சம் காசோலையாகவும் வழங்கப்பட்டது.


வெடி விபத்து எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்ய மாவட்ட  ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். ஆட்சியர் சங்கீதா உத்தரவின் பேரில் தீயணைப்புத்துறை, காவல்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் கல்குவாரிகளில் ஆய்வு செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.