எது நன்நெறி.. தமிழ்நாடு அரசு செயலில் காட்ட வேண்டிய நேரம் இது.. சு. வெங்கடேசன் எம்.பி.

Su.tha Arivalagan
Sep 06, 2024,11:07 AM IST

சென்னை: சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சர்ச்சைக்குரிய ஆன்மீகச் சொற்பொழிவுக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரால் ஒருவர் வந்து பேசிய அபத்தமான கருத்துக்கள் கடும் சலசலப்பையும், சர்ச்சையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத் திறனாளிகளையும் அவர் இழிவுபடுத்திப் பேசியுள்ளது பலரையும் கொதிக்க வைத்துள்ளது. தியானம் குறித்து அவர் பேசிய சில சர்ச்சையான கருத்துக்களும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.




இந்த விவகாரம் குறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கருத்து தெரிவிக்கையில்,  பாஜக ஆளும் மாநிலம் ஒன்றில்  ஓராண்டுக்கு முன் நாடாளுமன்ற கல்வி நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டோம்.


அங்கன்வாடி ஊழியர்கள் கிராமத்தில் உள்ள கோயில்களை தூய்மைப்படுத்தும் பணியும், அங்கு குழந்தைகளுக்கு போதிப்பதைப் பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்பினோம். அப்போது அந்த மாநிலத் தலைமைக் கல்வி அதிகாரி “கோயிலில்  பாவ புண்ணியத்தைப் பற்றிப் போதிக்காமல் ஒருவனுக்கு வாழ்வியலை எப்படி போதிக்க முடியும்?” என்று கேட்டார்.


இன்று அதே கேள்வியை தமிழ்நாட்டு அரசுப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்து ஒருவர் கேட்கிறார். மறுப்பு தெரிவிக்கும் ஆசிரியரைப் பார்த்து,  “உங்கள் பெயரென்ன?” என்று கேட்கிறார்.


அந்த ஆசிரியரின் பெயர் ஜான்சன் ஆகவோ, ஜாஹீர் உசேனாகவோ இருந்திருந்தால் இன்று முதல் பள்ளிக் கல்வி பற்றிய பிரச்சனை ஆர். என். இரவியிடமிருந்து ஹெச். ராஜா வுக்கு மாற்றப்பட்டிருக்கும்.


அவர்கள் தெரிந்தே செய்கிறார்கள். எது “நன்நெறி” என்பதை தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரமிது என்று தெரிவித்துள்ளார் சு. வெங்கடேசன்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்