பொங்கல் நாளையே.. மத்திய அரசின் தேர்வு முகமைகள் குறி வைப்பது ஏன்.. சு. வெங்கடேசன் கேள்வி

Manjula Devi
Dec 20, 2024,06:40 PM IST

சென்னை: மத்திய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன் என கேள்வி எழுப்பி பொங்கல் அன்று நடைபெறும் தேர்வுகளை மாற்றி அமைக்குமாறு மத்திய கல்வி அமைச்சருக்கும், தேசிய  தேர்வு முகமை பொது இயக்குனருக்கும் கடிதம் எழுதியுள்ளார் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்.


சிஏ-பட்டயக் கணக்காளர் தேர்வுகள் வருகின்ற 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 12,14,16,18 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டன. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்த தேர்வு தேதிகளை மாற்றுமாறு கடந்த மாதம் எம்பி சு. வெங்கடேசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார். இதனை அடுத்து பொங்கல் திருநாளில் நடைபெற இருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் அறிவித்தது.




இந்த நிலையில், தற்போது யு சி ஜி-நெட் தேர்வு பொங்கல் அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை 14, 15, 16,17 ஆகிய தேதிகளில்  கொண்டாடுவது வழக்கமாகும். இந்த நாள் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விழாவாகவும் கருதப்படுகிறது. இதனால் தமிழர்கள் வெகு விமர்சையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். 


ஆனால், அதே தேதியில் யுசிஜி  தேர்வு அறிவிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பொங்கலன்று அறிவிக்கப்பட்ட நெட் தேர்வுகளை மாற்றுமாறு ஒன்றிய கல்வி அமைச்சருக்கும் தேசிய தேர்வு முகமை பொது இயக்குனருக்கும் எம் பி சு வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், மத்திய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கின்ற பல்வேறு போட்டி தேர்வுகளும் பொங்கல் விடுமுறை நாளில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.


கடந்த மாதம்தான் பொங்கல் திருநாளன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் அதாவது சிஏ தேர்வு தேதியை போராடி மாற்றினோம். தற்போது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது. பொங்கல் பண்டிகையின் போது யு சி ஜி அதாவது நெட் தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் அறிவித்துள்ளது. 


மத்திய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்..?  இந்தத் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சருக்கும் தேசிய தேர்வு முகமை பொது இயக்குநருக்கும் கோரிக்கை வைத்துள்ளார் சு. வெங்கடேசன்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்