தண்டனையை ரத்து செய்து.. ஜாமீன் தருக.. நிர்மலாதேவி அப்பீல்.. மதுரை ஹைகோர்ட்டில் இன்று விசாரணை

Meenakshi
May 08, 2024,11:07 AM IST

மதுரை: 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரியும், இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும் பேராசிரியை நிர்மலாதேவி சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு  மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.


பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்தி பாலியலில் ஈடுபடுத்த, பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி  ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.




பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, விபச்சார தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரின் மீது வழக்கு தொடரப்பட்டது. இதன் பின்னர் 1,160 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது . இதற்கிடையே நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இவர்கள் மீதான வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது.


இந்த வழக்கில் ஏப்ரல் 29ம் தேதி  நீதிபதி பகவதி அம்மா தீர்ப்பு வழங்கினார். அதில் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அதேசமயம்,  முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை விடுவித்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அடுத்த நாள் தண்டனை விவரம் வெளியிடப்பட்டது. அதன்படி, நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ரூ.2.42 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதையடுத்து நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நிர்மலாதேவி சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. அதில், நிர்மலாதேவியின் 10 ஆண்டு கால சிறை தண்டனையை ரத்து செய்யகோரி மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.