அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது.. மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Su.tha Arivalagan
Dec 15, 2023,06:22 PM IST

- மஞ்சுளா தேவி


மதுரை: அமலாக்கத்துறை அதிகாரியை அங்கித் திவாரியை,  லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்த வழக்கை ,சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது.


அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி 20 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் லஞ்ச ஒழிப்பத்துறை போலீஸார் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரியை திண்டுக்கல்லில் உள்ள முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, மூன்று நாள் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறையினர் மனு தாக்கல் செய்தனர்.   நீதிமன்றம் அனுமதி அளித்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் அமலாக்கத்துறை அதிகாரியை காவலில் எடுத்து விசாரணை நடத்தி இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிறகு சிறையில் அடைத்தனர்.




கடந்த வாரம் அங்கித் திவாரி என்பவர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார் .இந்த மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் விவேக் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.


இந்த மனு இன்று நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் வாதிடுகையில், மத்திய அரசு அலுவலர்கள் குற்ற செயல்களில் ஈடுபடும் போது கைது செய்ய மாநில போலீசுக்கு முழு அனுமதி உள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பின்னர் உத்தரவு பிறப்பித்தனர்.


அப்போது, அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தடை இல்லை. கைது செய்யப்பட்ட நபரின் அலுவலகம் வீடுகளில் சோதனையிடவும், மத்திய அரசின் அதிகாரிகள் இதுபோன்ற தவறு செய்யும் போது அதை விசாரணை செய்யவும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முழு அதிகாரம். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சட்ட ரீதியான நடவடிக்கையேயே எடுத்துள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது என்று கூறி  உத்தரவிட்டனர்.