"பாசிச பாஜக ஒழிக" என கோஷமிட்ட மாணவி சோபியா மீதான வழக்கு ரத்து

Su.tha Arivalagan
Aug 16, 2023,01:03 PM IST
மதுரை: தமிழ்நாடு பாஜக தலைவராக டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பதவி வகித்தபோது, அவர் முன்பு பாஜக அரசு ஒழிக என்று கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா மீதான வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது.

2018ம் ஆண்டு தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தார் டாக்டர் தமிழிசை.  அந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அதே விமானத்தில் பயணித்தவர் ஆராய்ச்சி மாணவி சோபியா. இவர் தமிழிசையைக் கண்டதும், மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாசிச பாஜக ஒழிக என்று அவர் கோஷமிட்டதைக் கண்டித்து டாக்டர் தமிழிசை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



பின்னர் தூத்துக்குடிக்கு விமானம் வந்ததும் டாக்டர் தமிழிசை கொடுத்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார் சோபியா. இந்த வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றக் கிளை இன்று வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. சோபியா மீது போடப்பட்ட சட்டப் பிரிவுகள் பொருத்தமற்றவையாக உள்ளதாக கூறி நீதிபதி தனபால் சோபியா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.