நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும்.. மதுரை விநியோகஸ்தர்கள் அதிரடி தீர்மானம்

Manjula Devi
May 20, 2024,04:56 PM IST

மதுரை: மதுரையில் இன்று நடந்த திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டத்தில் நடிகர், நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகள் பெரிய அளவில் சம்பளம் வாங்குவது தொடர்ந்து ஒரு பிரச்சினையாகவே திரையுலகில் இரு்நது வருகிறது. அவர்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் தர வேண்டியிருப்பதால் தயாரிப்புச் செலவும் பல மடங்கு அதிகரிக்கிறது. படம் ஓடி லாபம் பார்த்தால் நல்லது, இல்லாவிட்டால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருப்பதாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது.




மேலும் இப்போதெல்லாம் அதிக முதலீடு செய்து படத்தை மிக பிரம்மாண்டமாக எடுத்து வருகின்றனர். அப்படி அதிக முதலீடு செய்து எடுக்கும் படங்கள் மக்களை கவரும் வகையில் இருந்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வசூலில் சாதனை படைக்கிறது. அதுவே, படம் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை எனில் ஃபிளாப் ஆகி விடுகிறது. இதனால் போட்ட பணத்தை முதலீட்டாளர்களால் எடுக்க முடியவில்லை‌. 


இந்த நிலையில் மதுரை- ராமநாதபுரம் பிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் அசோசியேஷன் கூட்டம் மதுரை ராயல் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய சங்க நிர்வாகிகளின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் கௌரவ தலைவராக கோபுரம் பிலிம்ஸ் ஜி.என்.அன்புச் செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


தலைவராக என். அழகர்சாமி, செயலாளராக எம்.ஓ.சாகுல் ஹமீது, உபதலைவராக கே.ஆர்.பிரபாகரன், இணைச்செயலாளராக ஆர்.தாமஸ், பொருளாளராக  ஆர்.எம்.மாணிக்கம், செயற்குழு உறுப்பினர்களாக கே.வெங்கடேசன், ஜி.குணசேகரன், சி. காளிஸ்வரன், ஏ.ஆர்.எஸ்.மணி, ஆர்.எம்.வீரப்பன், எஸ்.சரவணராஜா, எல்.சேகர், எஸ்.பி. செல்வம், ஆர்.ரமேஷ், வி. ஞானதேசிகன்  ஆகியோர் பதவி ஏற்றனர்.




இதனையடுத்து கூட்டத்தில், நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும். ஓடிடி யில் புதிய திரைப்படங்களை ஆறு வாரம் கழித்து வெளியிட வேண்டும். தமிழக அரசு திரையரங்குகளுக்கு விதித்த காம்பவுண்டிங் வரி எட்டு சதவீதத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.