Madurai Gang war: விகே. குருசாமி மரணம்.. அதிர வைத்த மதுரை கேங் வார்!

Su.tha Arivalagan
Sep 24, 2023,01:43 PM IST

பெங்களூர்: மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரை, பெங்களூர் ஹோட்டலில் வைத்து ஒரு கேங் சரமாரியாக வெட்டிக் கொன்ற  சம்பவம் பெங்களூரு மக்களை அதிர வைத்துள்ளது.


முன் விரோதம், போட்டி பொறாமை, பழிக்குப் பழி, வெட்டுக்கு வெட்டு.. கொலைக்குக் கொலை.. இதெல்லாம் இப்பவும் இருக்கு. அதுவும் துடிக்க துடிக்க அடுத்தடுத்து கொலை செய்யும் ரத்த வெறி.. அரசியலிலும் சரி, ஜாதி ரீதியாகவும் சரி இன்னும் மக்களிடமிருந்து விடை பெறாமல் விரட்டி விரட்டி வேட்டையாடிக் கொண்டுதான் இருக்கிறது.


பெங்களூரில் சமீபத்தில் ஒரு திகில் காட்சி அரங்கேறியது.. சினிமாக்களில் மட்டுமே இப்படிப்பட்ட காட்சிகளை பார்க்க முடியும்.. ஆனால் கண் முன்பாகவே நிஜத்தில் நடந்தேறியது பெங்களூரு மக்களை அதிர வைத்து விட்டது.


நண்பருடன் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவரை திடீரென சுற்றிச்சூழ்ந்த ஒரு கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்ட ஆரம்பித்தது. உயிர் பிழைக்க இருவரும் ஹோட்டலுக்குள்ளேயே அங்குமிங்கும் ஓடியும் கூட விடாமல் விரட்டி விரட்டி வெட்டித் தள்ளி விட்டுத் தப்பியது அந்தக் கும்பல்.




யார் அந்த கும்பல்?


மதுரையைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. திமுகவைச் சேர்ந்த இவர் மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர். முன்னாள் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவராக இருந்தவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்தவ அதிமுகவின் ராஜபாண்டி. இருவருக்கும் பூர்வீகம், கமுதி அருகே உள்ள கிராமம். ஒரே ஜாதிதான். இருவரும் ஆரம்ப காலத்திலிருந்தே முட்டி மோதிக் கொண்டிருந்தனர். வழக்கம் போல தேர்தல் தகராறுதான். கிட்டத்தட்ட கடந்த 20 வருடத்திற்கும் மேலாக இந்தப் பகை நெருப்பு போல தகித்துக் கொண்டிருக்கிறது.


சொந்த ஊரிலும், வாழ வந்த மதுரையிலும்.. இரு தரப்பும் அடிக்கடி மோதிக் கொள்ளும். பலர் உயிரிழந்தும் உள்ளனர். குருசாமியின் மருமகனை ராஜபாண்டி குரூப் வெட்டிக் கொன்றது. ராஜபாண்டியின் மகனை குருசாமி குரூப் உயிரோடு எரித்துக் கொன்றது. இந்த கொலை வெறி இவர்களை விட்டு போகவில்லை. மாறி மாறி உயிர் குடிக்க காத்துக் கொண்டே இருக்கும் இரு பிரிவுகளும். இரு தரப்பு மீதும் 30க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளன. இரு தரப்பும் அடிக்கடி மோதிக் கொள்ளும் என்பதால் இவர்கள் இருவரையும் போலீஸார் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பிலேயே வைத்திருந்தனர்.


இந்த நிலையில்தான் குருசாமி தனது ரியல் எஸ்டேட் நண்பர் ஒருவருடன் பெங்களூரு போயிருந்தார். பானஸ்வாடி பகுதியில் உள்ள சுக்சாகர் ஹோட்டலில் அவருடன் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 5க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் குருசாமியை சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டத் தொடங்கியது. அந்தக் கும்பலிடமிருந்து தப்ப ஹோட்டலுக்குள்ளேயே அங்குமிங்கும் ஓடினார். இருப்பினும் அந்தக் கும்பல் விடவில்லை. அவரையும், அவரது நண்பரையும் சரமாரியாக வெட்டியது. இதில் குருசாமிக்கு மட்டும் 70 இடங்களில் வெட்டு விழுந்தது.


வி.கே குருசாமி மரணம்


தகவல் அறிந்து விரைந்துவந்த போலீஸார் அந்தக் கும்பலை மடக்கினர். அதில் கார்த்திக், வினோத் குமார், பிரசன்னா ஆகிய 3 பேர் சிக்கினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த குருசாமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். பெங்களூர் ஹோட்டலில் நடந்த இந்த கேங் வார் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




கமுதியில் தொடங்கி மதுரையை அதகளம் செய்த நிலையில் இப்போது எல்லை தாண்டி கர்நாடகம் வரை போய் விட்ட இந்த கொலை வெறி முன்பகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து யாருடைய தலை விழப் போகிறதோ என்ற அச்சமும் மதுரையில் குடியேறியுள்ளது.