மதுரை.. இந்து முன்னணி போராட்ட அறிவிப்பு எதிரொலி.. போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருப்பரங்குன்றம்!

Manjula Devi
Feb 04, 2025,07:09 PM IST

மதுரை: திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்த நிலையில் இன்று திருப்பரங்குன்றம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உச்சகட்ட  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்ற மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா இடையேயான பிரச்சனை தலை தூக்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்துக்கள் புனிதமாக கருதப்படும் திருப்பரங்குன்றம் மலைமீது அசைவ உணவு சமைத்ததாகவும்  குற்றம் சுமத்தப்பட்டு பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆட்களை திரட்டி திருப்பரங்குன்றத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. 

காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தது. இருப்பினும் தடையை மீறி இந்த முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தப் போவதாக சோசியல் மீடியாவில் தகவல் வைரலானது. இதனையடுத்து இந்து முஸ்லிம் இடையான ஒற்றுமை பிரச்சனை தொடர்பாக அசாதாரண சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா மதுரை முழுவதும் நேற்றும் இன்றும் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார். 



இதில் வெளியூர்  மக்கள்  போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது.. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் கூட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை காவல்துறை பிறப்பித்த இருந்தது.

இந்த நிலையில்  திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும் இந்துக்களின் உரிமையை உறுதிப்படுத்த வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்கு இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பாஜகவினர் தொடர்ந்து அழைப்பு விடுத்து  வந்தனர். தமிழகம் முழுவதுமிருந்து இந்துக்கள் ஒன்று திரண்டு இன்று போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து வந்தனர். 

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பரங்குன்றம் முழுவதும் போலீஸ் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு  அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 4000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலவரத் தடுப்பு வஜ்ரா வாகனமும் கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.   சுற்று வட்டார  பகுதியிலிருந்து திருப்பரங்குன்றம் வரும் வழிகளில் எல்லாம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலத்தில் வரும் நபர்கள் மற்றும்  விடுதிகளில் தங்கி இருக்கும் நபர்களை சோதனைகள் செய்து, சந்தேகத்திற்கிடமானவர்களைக் கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று பிற்பகலுக்குப் பிறகு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வந்த நிலையில் சாலைகளிலேயே பாதுகாப்புகள் போடப்பட்டு  வெளிநபர்களை உள்ளே விடாமல் காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் கோவில் அருகில் மட்டும் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு பூஜை சாமான் விற்கும் ஒரு சில கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கு தடையின்றி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மலை மீது ஏறி செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்