"வராரு அழகர் வராரு".. ஆற்றில் இறங்கும் கள்ளழகர்.. மதுரைக்கு மே 5ம் தேதி லீவு!
Apr 26, 2023,03:28 PM IST
மதுரை: மதுரையில் உலகப் புகழ் பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 5ம் தேதி நடைபறவுள்ள நிலையில் அன்று மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்கி விட்டது. ஏப்ரல் 23ம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி விட்டது. தினந்தோறும் ஒரு வைபவம் என மதுரை மக்கள் திருவிழா மோடில் உலா வந்து கொண்டுள்ளனர். சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சங்கள் - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகியவையே.
வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் மே 5ம் தேதி இறங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. தற்போது மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, அழகர் மீது தீர்த்தவாரி செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து மதுரை கள்ளழகர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அசுத்தமான தண்ணீரை பீய்ச்சக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் மாசு காரணமாக அழகரும், அவர் அமர்ந்து வரும் தங்கக் குதிரையும் சேதமடைவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது அணியும் பட்டும் கூட பேசு பொருளாக இருக்கும். அவர் அணிந்து வரும் பட்டின் நிறத்திற்கேற்ப அந்த ஆண்டு பலன்கள் அமையும் என்பது ஐதீகமாகும். குறிப்பாக பச்சைப் பட்டு அணிந்து ஆற்றில் இறங்கினால் அந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும், மழைக்குப் பஞ்சம் இருக்காது என்பார்கள்.