மதுரை குலுங்க குலுங்க.. களைகட்டும் சித்திரை திருவிழா.. விறுவிறுப்பாகும் ஏற்பாடுகள்!

Aadmika
May 01, 2023,09:43 AM IST
மதுரை : உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனால் மதுரை நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக மே 2 ம் தேதி (நாளை) மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும்,  மே 3 ம் தேதி தேரோட்டமும், மே 5 ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளன. மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் காண விரும்பும் பக்தர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஏப்ரல் 25 ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.



மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5000 க்கும் அதிகமான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். மற்றொரு புறம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில், தங்கக் குதிரையில், வைகை ஆற்றில் இறங்க உள்ளார். திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் ஆயிரம் பொற் காசுகள் செலவில் பிரம்மாண்ட சப்பரம் செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது.

சில ஆண்டுகளில் அது பழுதடைந்ததால், பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. ஆண்டுதோறும் தங்க குதிரை வாகனத்தில் மட்டுமே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி வந்தார். நீண்ட நாட்களாக ஆயிரம் பொன் ச��்பரத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்ததால், இந்த ஆண்டு ஆயிரம் பொன் சப்பரம் சீரமைக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தங்க குதிரையும் சுத்தம் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொட்டும் மழையிலும் தினமும் மாட வீதிகளில் நடக்கும் சுவாமி - அம்பாள் திருவீதி உலாவை காண பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.