பிரமாண்டமாக முடிந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. கார்த்திக் புதிய சாதனை.. 18 காளைகளை அடக்கி அசத்தல்!

Su.tha Arivalagan
Jan 15, 2024,06:59 PM IST

மதுரை:  பொங்கல் திருநாளை ஒட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தேறியது.


அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் புதிய சாதனை படைத்தார். கடந்த 202ம் ஆண்டு 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து டூவீலர் பரிசாக வென்ற அவர், இந்த முறை 18 காளைகளை அடக்கி, கார் பரிசு பெற்று அசத்தி விட்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கார் அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது.


அதே ஊரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் 14 காளைகளைப் பிடித்து 2வது இடத்தைப் பெற்றார். தேனி மாவட்டம் சீலையம்பட்டி முத்துக்கிருஷ்ணன் மற்றும் முரளிதரன் ஆகியோர் தலா 9 காளைகளை அடக்கி 3வது இடத்தைப் பிடித்தனர்.


மொத்தம் 10 சுற்றுக்களாக நடந்த ஜல்லிக்கட்டில் 817 காளைகள் 400 வீரர்கள் பங்கேற்றனர்.  அவனியாபுரம் ஜி.ஆர். கார்த்திக்கின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசு வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் இந்த கார் பரிசு வழங்கப்பட்டது.




தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. பொங்கல் என்றதும், முதலில் நினைவுக்கு வருவது கரும்பு, சர்க்கரை பொங்கல் அடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள்தான். அந்த வகையில் இந்த ஆண்டில் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்று முடிந்து விட்டது.


இன்று மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கின. முதலில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தேறியுள்ளது. அமைச்சர் ப.மூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலையில் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


சீறிவரும் காளைகளை பாய்ந்து அடக்கிய காளையர்களுக்கு விதவிதமான பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. சைக்கிள், பீரோ, குடங்கள், நாற்காலி, சேர் என்று விதவிதமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதற்குட்பட்டு இன்று மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி வருகிறார்கள். காளைகளுக்கும் பல்வேறு விதமான சோதனைகள் நடத்தப்பட்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.


போட்டி நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு விரிவான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆம்புலன்ஸ் வாகனங்களும் மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். எந்தவித அசம்பாவிதமும் இன்று நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து செய்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவனியாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன.