மதுரை விமான நிலையம்.. இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும்.. கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு
மதுரை: மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படவுள்ளது. இதையடுத்து பாதுகாப்புக்காக கூடுதல் சிஎஸ்ஐஎப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மதுரை விமான நிலையம் 24 மணி நேர செயல்பாட்டைத் தொடங்கியுள்ளதால் மதுரையிலிருந்து விமான பயணம் செய்வோர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக மதுரை திகழ்ந்து வருகிறது. ஆரம்ப காலத்தில் இது பாதுகாப்புப் படையினருக்கான விமான நிலையமாகத்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர்தான் இது சிவில் விமான நிலையமாக மாற்றப்பட்டது. அருகாமையில் உள்ள திருச்சி விமான நிலையத்திலிருந்துதான் முன்பு அதிக அளவிலான விமான சேவைகள் இருந்தன. ஆனால் காலப் போக்கில் மதுரை விமான நிலையத்திலிருந்தும் அதிக அளவிலான விமானங்களை இயக்க கோரிக்கை வலுத்து வந்தது.
இதையடுத்து படிப்படியாக மதுரை விமான நிலையத்திலிருந்தும் பல்வேறு இந்திய நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் தொடங்கி தற்போது தமிழ்நாட்டின் முக்கியமான, லாபகரமான விமான நிலையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது மதுரை. இருப்பினும் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை இல்லாமல் இருந்து வந்தது. மேலும் பன்னாட்டு விமான நிலையமாகவும் இது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வர்த்தக சபையினர் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைத்து வந்தனர். மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் தொடர்ந்து இதுதொடர்பாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் சில மாதங்களுக்கு முன்பு தென் மாவட்டங்களைச் சேர்ந்த எம்பிக்கள் சு. வெங்கட்சன், தங்க தமிழ்ச்செல்வன், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி ஆகியோர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சிரப்புவை நேரில் சந்தித்து மனுவையும் அளித்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் தனது 24 மணி நேர செயல்பாட்டை மதுரை விமான நிலையம் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. மதுரை விமான நிலையத்திலிருந்து இரவு நேரத்திலும் சேவைகளை விரிவுபடுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு விட்டன.
24 மணி நேர சேவை தொடங்கவுள்ளதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எம்.பிக்கள் சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்