கட்டுமானப் பணிகளுக்கு.. சுற்றுச்சூழல் அனுமதிகோரும்.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம்

Meenakshi
Jan 30, 2024,12:51 PM IST

மதுரை: மதுரை தோப்பூர் பகுதியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.


தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இதற்கான இடம் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்து வருகிறது.


இதனால் இதை வைத்தே ஒற்றைச் செங்கலைக் காட்டி திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார் உதயநிதி ஸ்டாலின். இப்போது லோக்சபா தேர்தலும் வரப் போகிறது. இந்த நிலையில் இன்னும் கூட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கவில்லை.




224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1264 கோடி மதிப்பில்,  சுமார் 750 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவ கல்லூரி, செவிலியர் கல்லூரி, பணியாளர்கள் குடியிருப்பு, மாணவ மாணவியர்களுக்கான விடுதி உள்ளிட்டவை  அமைக்கப்பட உள்ளன. இந்த மருத்துவமனைக்காக தலைவர், செயல் இயக்குனர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். 


இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. இந்த அனுமதி கிடைத்ததும் கட்டுமானப் பணிகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.