அள்ளி அள்ளித் தரும் தாயுள்ளம்.. மேலும் 91 சென்ட் நிலம் தானம்.. அசத்தும் மதுரை பூரணத்தம்மாள்!

Su.tha Arivalagan
Feb 05, 2024,10:21 PM IST

மதுரை: மதுரை ஆயி பூரணத்தம்மாள் தனக்குச் சொந்தமான மேலும் 91 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குத் தானமாக கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 3 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


மதுரை கொடிக்குளம்  பகுதியைச் சேர்ந்தவர் ஆயி பூரணத்தம்மாள். இவரது ஒரே மகள் ஜனனி காலமாகி விட்டார். மதுரை கனரா வங்கியில் வேலை பார்த்து வரும் பூரணத்தம்மாள் தனது மகள் நினைவாக, கொடிக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தனக்குச் சொந்தமான 1.52 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்து அனைவரையும் நெகிழ வைத்தார். இதன் சந்தை மதிப்பு ரூ. 7 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து  மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இவரைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். இவரை நேரில் சந்தித்தும் வணங்கினார். இதையடுத்து தமிழ்நாடு அரசும் அவருக்கு முதலமைச்சர் சிறப்பு விருது அளித்து குடியரசு தின விழாவில் கெளரவித்தது.




இந்த நிலையில் மீண்டும் மக்களை நெகிழ வைக்கும் காரியத்தை செய்துள்ளார் பூரணத்தம்மாள். தனக்குச் சொந்தமான மேலும் 91 சென்ட் நிலத்தையும் அரசுப் பள்ளிக்கே எழுதிக் கொடுத்து விட்டார் பூரணத்தம்மாள். இதன் மதிப்பு ரூ. 3 கோடியாகும்.


அடுத்தடுத்து அரசுப் பள்ளிக்கூடத்திற்கு தனது நிலத்தை தானமாக அளித்து அனைவரது உள்ளத்திலும் மிகப் பெரிய இடத்தைப் பெற்றுள்ளதோடு, கல்விக்கு பூரணம்மாள் கொடுத்துள்ள இந்த முக்கியத்துவம் அனைவரையும் உருக வைத்துள்ளது.


"கல்வித்தந்தை" என்று கூறிக் கொள்ளும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.. அந்தப் பெயரை வைத்துக் கொண்டு, வசூல் வேட்டையாடி கல்லாக் கட்டுவோர்தான் அதிகம்.. ஆனால்  உண்மையில்.. இவர்தான் பூரணத்தம்மாள்தான் உண்மையான "கல்வித்தாய்".. மனதார பாராட்டுவோம்!