மக்களவைத் தேர்தலில்.. தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு..!

Manjula Devi
Mar 07, 2025,07:49 PM IST

சென்னை: மத்திய சென்னை தொகுதிக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது தீர்ப்பு வழங்கி உள்ளது.


கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை  தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் போட்டியிட்டு இரண்டு லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல் ரவி இந்தத் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, தயாநிதி மாறனின் வெற்றியை எதிர்த்து   சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இந்த மனுவில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏப்ரல் 17ஆம் தேதியுடன்  பிரச்சார பணிகள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. அன்று தயாநிதி மாறன் பிரச்சார விளம்பரம் குறித்து பத்திரிகைகளில் வெளியிட்டதாகவும், இது சட்டத்திற்கு புறம்பானது  எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும் பிரச்சார செலவு , விளம்பரச் செலவு, பூத் கமிஷன் என தேர்தல் ஆணையம் நியமித்த தொகையை விட அதிக அளவு பணம் செலவழித்ததாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே தயாநிதி மாறனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டது.


இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். பின்னர் சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.