அதிமுக சின்னம், கொடி, பெயரை பயன்படுத்தக் கூடாது.. ஓ பிஎஸ்சுக்கு ஹைகோர்ட் நிரந்தர தடை!

Meenakshi
Mar 18, 2024,08:10 PM IST

சென்னை: அதிமுக கொடி, கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அதிமுகவின் கட்சி பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி கடந்த செப்டம்பர் மாதம்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த வழக்கு முடியும் வரை முதலில் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். 




இதையடுத்து அதிமுகவின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டார்.  இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில், மூல வழக்கின் உத்தரவின் அடிப்படையில் முடிவெடுக்குமாறு ஓ.பி.எஸ் தரப்பு நீதிபதிக்குக் கோரிக்கை வைத்தது.


ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்து மனு செய்திருந்தது. இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த மார்ச் 12ம் தேதி முடிவடைந்தது.வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.


இன்று இதில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் இடைக்கால உத்தரவை நிரந்தரமாக்குவதாகவும், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த நிரந்தர தடை விதிக்ககப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.


வரும் லோக்சபா தேர்தலில் எப்படியும் இரட்டை இலை சின்னத்தைப் பெற்று விடுவோம் என்று கூறி வந்தார் ஓ.பி.எஸ். கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் பேசி வந்தார். ஆனால் தற்போதையை தீர்ப்பு அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.