இஎஸ்ஐ வழக்கு.. எழும்பூர் கோர்ட்டில் சரணடைய வேண்டும்.. ஜெயப்பிரதாவுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

Meenakshi
Oct 20, 2023,06:04 PM IST

சென்னை: நடிகையும் எம்.பி.யுமான ஜெயப்பிரதா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயப்பிரதா. தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்தும், பிற நடிகர்களுடனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.


பின்னர் அரசியலில் புகுந்த இவர் சமாஜ்வாடிக் கட்சியில் ஆரம்பத்தில் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார். தற்போது பாஜகவில் இருக்கிறார். உத்தரப் பிரதேச மாநில அரசியலில் இவர் ஈடுபட்டுள்ளார். இவர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக ஒரு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.




அதாவது முன்பு ஜெயப்பிரதா என்ற தியேட்டரை சென்னையில் நடத்தி வந்தார். அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இஎஸ்ஐக்காக பணம் பிடித்து விட்டு அதை செலுத்தாமல் இருந்து வந்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், எழும்பூர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.


இந்த வழக்கில் ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன்  5000 அபராதமும் விதித்து எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல்செய்தார் ஜெயப்பிரதா. அங்கு வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. ஆனால் தண்டனை நிறுத்திவைக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் ஜெயப்பிரதா.


இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  தண்டனையை நிறுத்தி வைக்க  முடியாது என்றும், முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மறுத்தும் உத்தரவிட்டது. மேலும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.  மேலும், நிலுவையில் உள்ள ரூ. 20 லட்சம் தொகையை இஎஸ்ஐக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.


இதனால் ஜெயப்பிரதாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதையெல்லாம் செய்தால்தான் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.