அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி மனு செய்யலாம்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஹைகோர்ட் கேள்வி

Meenakshi
Jul 26, 2024,05:14 PM IST

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு செய்ய முடியும்? என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


ஜெயலலிதாவின் மறைவுக்கு முன்னர் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்து வந்தார். அவர் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவி வந்தன. ஜெயலலிதாவிற்கு அடுத்து சசிகலா தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சொல்லப்பட்ட நிலையில், அவர் மீது பாய்ந்த சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் இணைந்து செயல்பட்டனர். ஓபிஎஸ்ஸும் வெளியேற்றப்பட்ட பிறகு எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது அதிமுக பொதுக்குழு.




இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் சார்பில்  வழக்குத் தொடரப்பட்டது. மேலும், சசிகலா தரப்பிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மனு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் எனக்கூறி மனுத்தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நீங்கள் எப்படி பொதுச்செயலாளர் எனக்கூறி மனு செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மன்னிப்பு  தெரிவிக்கப்பட்டது.  திருத்தம் செய்யப்பட்ட மனுவை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளார்.