உடல் பருமன் சிகிச்சை.. இளைஞர் பலி.. மருத்துவமனை மீதான தடையை நீக்கியது மெட்ராஸ் ஹைகோர்ட்!

Meenakshi
May 27, 2024,03:44 PM IST

சென்னை: சென்னையில் உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின் போது புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் மரணமடைந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.


சென்னை அடுத்த பம்மலில் உள்ள பி.பி.ஜெயின் மருத்துவமனையில் உடல் பருமன் காரணமாக புதுவையைச் சேர்ந்த ஐ.டி. பொறியாளர் ஹேமச்சந்திரன் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். இந்நிலையில் ஹேமச்சந்திரனுக்கு அறுவை சிகிச்சை செய்து கொழுப்பு நீக்க முடிவு செய்யப்பட்டது. 256 கிலோ உடைய ஹேமச்சந்திரனுக்கு  கடந்த ஏப்ரல் 22ம் தேதி  அறுவை சிகிச்சை வயிலாக உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க முடிவு செய்திருந்தனர் மருத்துவர்கள். ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கி  15 நிமிடங்களில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 




கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அவர் இறந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த இவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க உத்தரவிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


இதன்படி ஹேமச்சந்திரன் சிகிச்சை பெற்ற வந்த  சென்னை பம்மலில் உள்ள பி.பி.ஜெயின் மருத்துவமனையில்  சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது. டாக்டர்களிடமும் ஆலோசனை நடத்தியது. அத்துடன் பம்மல் தனியார் மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்தது சுகாதாரத்துறை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சுகாதாரத்துறையின் உத்தரவை ரத்து செய்து, மருத்துவமனை செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.