ஈரோடு கிழக்கு தேர்தலை ரத்து செய்ய முடியாது.. சென்னை ஹைகோர்ட் மறுப்பு.. மனு தள்ளுபடி
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தொகுதியில் ஈவிகேஎஸ் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதனால் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தனது 46வது வயதில் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 14ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து டிசம்பர் 18ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எல்எல்ஏவான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 46 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் 3வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வருகிற எட்டாம் தேதி வெளியாக உள்ளன.
இந்நிலையில், உண்மை தகவலை மறைத்து மனு தாக்கல் செய்தவர்களை, வேட்பாளர்களாக அறிவித்ததாகக் கூறி சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தகவல்களை மறைத்தவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்ட நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து மனுதாரர் அளித்த புகார் மனு மீது தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தினர். மேலும், தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்