முதல்வருக்கு எதிரான பேச்சு.. சி.வி சண்முகம் மீதான வழக்கு ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Manjula Devi
Aug 12, 2024,06:40 PM IST

சென்னை:  முதல்வர்  மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது .


கடந்த 2022 ஆம் ஆண்டு திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக  திமுக நிர்வாகி ஒருவர் சிவி சண்முகம் மீது வழக்கு தொடுத்தார். இதன் அடிப்படையில் இரண்டு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல், பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இந்த அவதூறு வழக்கை,  ரத்து செய்ய வேண்டும் என சிவி சண்முகம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.




இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது சி.வி. சண்முகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜான் சத்யன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால் அரசு தான் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். மாறாக திமுக நிர்வாகி புகார் கொடுத்துள்ளார் என கூறப்பட்டது.


அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், சிவி சண்முகத்தின் பேச்சு மோசமானது தான். அவரது பேச்சை ஏற்கவில்லை. அதற்காக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய முடியுமா..? என  கேள்வி எழுப்பினார். இதற்கு போலீசார், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் படியான சிவி சண்முகத்தின் பேச்சு பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்படியே இருக்கும் என்பதால் இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது என பதிலளித்தார்.


இதனை தொடர்ந்து நீதிபதி வேறு பிரிவுகள் ஏதேனும் பொருந்தினால் அதில் வழக்கு பதிவு செய்யுங்கள் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக சிவி சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்