தாலி அகற்றும் நிகழ்ச்சியின்போது வன்முறை.. 17 தி.க. தொண்டர்களுக்கு எதிரான வழக்கு ரத்து

Su.tha Arivalagan
Mar 06, 2024,02:27 PM IST

சென்னை:  கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை பெரியார் திடலில் நடந்த தாலி அகற்றும் நிகழ்ச்சியில் வன்முறையில் ஈடுபட்டதாக  திராவிடக் கழகத்தைச் சேர்ந்த 17 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.


கடந்த 2014 ம் ஆண்டு சென்னை பெரியார் திடலில்,  தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டிறைச்சி விழாவுக்கு  அப்போதைய அதிமுக அரசு அனுமதி மறுத்த நிலையில் தி.க துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் காவல்துறை அனுமதி மறுப்பு உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 




அரசியல் சட்டப்பிரிவு 19உட்பிரிவு ஒன் படி  அனுமதி மறுக்கப்பட்டது தவறு என்று அப்போதைய நீதிபதி ஹரிபரந்தாமன் தீர்ப்பளித்தார் . அதனடிப்படையில் நடைபெற்ற நிகழ்வில் செய்த இந்து முன்னணியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.இதை தட்டிக்கேட்ட  திராவிடர் கழகத்தினர் 17 பேர் மீது   வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கடந்த 2017 இல்  குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.


இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்  தி.கவை சார்ந்த கலைமணி உள்ளிட்ட 17 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு,   சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்  முன்பு விசாரணைக்கு வந்தது. 


அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் அருண் ஆஜராகி, நீதிமன்ற அனுமதியுடன் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது என்றும் அதன் பிறகு காவல்துறை மேல்முறையீட்டில்  நிகழ்விற்கு தடை பெற்றதுடன் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு  தொண்டர்களை கலைந்துபோக  திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிவுறுத்தியதின் அதன்படியில், அனைவரும் கலைந்து சென்றதாகவும், அப்போது இந்து முன்னணி மற்றும் சிவசேனா கட்சியினர் பெரியார் திடலுக்கு வந்து வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.


அதை  தட்டிக்கேட்டதற்காக போடப்பட்ட வழக்கு என்ற அடிப்படையில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் திராவிட கழகத்தைச் சேர்ந்த 17 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.