கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Meenakshi
Oct 23, 2024,04:40 PM IST

சென்னை: விவாகரத்து வழக்குகளில் தம்பதியரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக் கூடாது. விவாகரத்து வழக்குகளில் காணொலி காட்சி மூலம் ஆஜராக வாய்ப்பளிக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதிகள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் விவகாரத்து பெற நினைத்துள்ளனர். இந்நிலையில் பரஸ்பரம் விவாகரத்து வழங்கக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.




இந்த வழக்கு விசாரணைக்காக இந்தியா வர நினைத்த தம்பதிகள் விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சென்னை வர முடியாமல் போகியுள்ளது. இதனால், காணொலி காட்சி மூலம் ஆஜராகிய நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை எனக் கூறி, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய சென்னை குடும்ப நல நீதிமன்றம் மறுத்துள்ளது.


இந்த நிலையில், மனைவி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மனு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நிர்மல்குமார் கூறுகையில், குற்ற வழக்குகளில் தான் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராவது கட்டாயம் என கூற முடியும். பிற வழக்குகளில் குறிப்பாக, விவாகரத்து வழக்குகளில் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், நேரில் ஆஜராக வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்றும்  குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்