டிடிஎப் வாசனின் பைக்கை எரித்து விடலாம்.. ஹைகோர்ட் நீதிபதி ஆவேசம்

Meenakshi
Oct 05, 2023,02:55 PM IST
சென்னை: விளம்பர நோக்கில் நடந்து கொள்ளும் டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும். இவரின் யூ டியூப் சானலையும் முடக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி. வி. கார்த்திகேயன் கூறியுள்ளார்.

யூடியூபரான டிடிஎஃப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி அதனை தனது யூடியூப் சேனலில் போடுபவர். இவரது வீடியோக்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. குறிப்பாக 2கே கிட்ஸ்தான் அதிகம்.  வீடியோக்களின் மூலம் பல லட்சம் லைக்குகளை அள்ளி யூடியூப் மூலம் பேமஸ் ஆனவர். 



டிடிஎப் வாசன் சமீபத்தில் பெங்களூரு சாலையில் பைக்கில் செல்லும் போது வீலிங் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி காயம் அடைந்தார். நல்லவேளையாக இவரது சேட்டையால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. போலீஸார் வாசன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அவர் மீது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

டிடிஎப் வாசன் ஜாமீன்  கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அவரது ஜாமீன் மனுவை 2 முறை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், 3வது முறையாக டிடிஎப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது நீதிபதி சி.வி. கார்த்திகேயன், ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி கார்த்திகேயன் வாசன் குறித்து சில கருத்துக்களையும் தெரிவித்தார். அவர் கூறுகையில், நெடுஞ்சாலையில், விபத்து ஏற்படுத்திய யூடியூப் வாசனின் பைக்கை எரித்து விட வேண்டும். விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும். அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டால் தொடர்ந்து சிறைக்குள்ளேயே வைத்து சிகிச்சை தரலாம் என்று தெரிவித்தார்.

நீதிபதியின் இந்த  கருத்து விவாதங்களை எழுப்பியுள்ளது. பலர் ஆதரித்தும், சிலர் இதுபோல நீதிபதிகள் கருத்து சொல்லக் கூடாது என்றும் விவாதித்து வருகின்றனர்.