நெட்பிளிக்ஸுக்கு ஷாக் கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்.. தனுஷ் கை ஓங்கியது!
சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரிய நெட்பிளிக்ஸின் மனு இன்று தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இதனால் நயன்தாரா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருக்கு சொந்தக்காரர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில், நயன்தாராவின் பிறந்த நாளையொட்டி கடந்த 18ம் தேதி 'beyond the fairytale' என்ற தலைப்பில் வெளியானது. இதில் நயன்தாரா- விக்னேஷ் சிவனுடனான வாழ்க்கை பற்றி விரிவாக காண்பிக்கப்பட்டது.
இந்த ஆவண படத்துக்காக, நடிகர் தனுஷின் வொண்டர் பார் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனைதொடர்ந்து நடிகர் தனுசுக்கு எதிராக அறிக்கை ஒன்றையும் நயன்தாரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் அனைத்து தரப்பினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தநிலையில், நயன்தாராவுக்கு எதிராக வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி நயன்தாரா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார். இதனையடுத்து தனுஷ்தரப்பிலும் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, நெட்பிளிக்ஸ் தரப்பில் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று வாதிடப்பட்டது. மேலும் தனுஷின் அலுவலகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளதால் சென்னையில் வழக்கு தொடர முடியாது. காஞ்சிபுரத்திலோ அல்லது நெட்பிளிக்ஸ் நிறுவனம் அமைந்துள்ள மும்பையிலோ தான் தொடர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் நெட் பிளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு வந்தது. அப்போது வொண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நெட் பிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த உரிமையியல் வழக்கை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இது நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் தரப்புக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இன்றைய உத்தரவால் தனுஷ் தரப்பு உற்சாகமடைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்