செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி.. 3 மாதத்தில் வழக்கை விசாரிக்க உத்தரவு!

Su.tha Arivalagan
Feb 28, 2024,06:45 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்  மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் தொடர்ந்து ஜாமீனுக்கு முயற்சி செய்தி வருகிறார். இதுவரை ஜாமீன் கிடைத்தபாடில்லை.


இந்த நிலையில், அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணையில் இருந்தது. இன்று நீதிபதி தனது உத்தரவைப் பிறப்பித்தார்.




அமலாக்கதுறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டிருந்தாவது... 


போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பதவிக்கு ஏற்றவாறு, 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை என மொத்தம், 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு மூன்று வழக்குகள் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளன. அந்த ஆதாரங்கள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமே அமலாக்கத் துறை பெற்றது. அந்த ஆதாரங்கள் திருத்தப்படவில்லை.


கடந்த முறை ஜாமீன் மனு தள்ளுபடிக்கு பிறகு வழக்கில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதுவும் ஜாமீன் மனு விசாரணை துவங்குவதற்கு ஒரு நாள் முன் தான் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் இன்னமும் அவர் செல்வாக்கான நபராகவே உள்ளார். ஏற்கனவே பணம் கொடுத்தவர்களிடம் செந்தில் பாலாஜி சமரசம் செய்திருக்கிறார். 


வழக்கில் சாட்சிகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்க கூடும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சண்முகம், சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் அமலாக்கதுறை தெரிவித்தது. 


மறுபக்கம், செந்தில் பாலாஜி தரப்பில், நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதாகவும், ஜாமீன் வழங்க கோரியும் வாதம் வைக்கப்பட்டது. 


இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டார்.


மேலும் செந்தில் பாலாஜி நீண்ட நாட்கள் சிறையில் இருப்பதால் அவர் தொடர்புடைய வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 3 மாதத்தில் அவர் மீதான வழக்கை விசாரித்து முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.