வேதாரண்யம் தொகுதியிலிருந்து ஓ.எஸ். மணியன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் - ஹைகோர்ட்

Su.tha Arivalagan
Dec 22, 2023,11:24 AM IST

சென்னை: வேதாரண்யம் சட்டசபைத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் ஓ.எஸ். மணியன் பெற்ற வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனும், திமுக சார்பில் வேதரத்தினமும் நேருக்கு நேர் மோதினர். கடும் அனல் கிளப்பிய இந்தத் தேர்தலில் மணியன் வெற்றி பெற்றார். வேதரத்தினத்தை விட 12,329 வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஓ.எஸ். மணியன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து வேதரத்தினம் வழக்குத் தொடர்ந்தார். 


அதில், மிகப் பெரிய அளவில் பணத்தை வாரியிறைத்து, வாக்காளர்களை விலைக்கு வாங்கியும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தியும் வாக்காளர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை லஞ்சமாக கொடுத்தும் மணியன் வெற்றி பெற்றதாகவும், பொய்யான வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளதாகவும் தனது மனுவில் கூறியிருந்தார் வேதரத்தினம்.




இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தண்டபாணி இன்று தீர்ப்பை அளித்தார். அப்போது குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறிய அவர் ஓ.எஸ்.மணியன் தேர்வு செல்லும் என்று உத்தரவிட்டார்.