மதிமுகவுக்கு பம்பர சின்னம் கிடையாது.. சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் துரை வைகோ
சென்னை: மக்களவை தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் பம்பர சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் சுயேச்சை சின்னத்தில் துரை வைகோ போட்டியிடவுள்ளார்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளரின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும், மதிமுகவின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது புதன்கிழமை காலைக்குள் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதிமுகவுக்கு பம்பர சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் முடிவில் குறுக்கிட முடியாது என்று தெரிவித்த ஹைகோர்ட், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.