புறம்போக்கு நிலங்களை.. மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.. ஹைகோர்ட் சூப்பர் உத்தரவு!

Su.tha Arivalagan
Feb 22, 2024,07:25 PM IST

சென்னை: கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மெய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை, அரசின் 97 மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.


சிப்காட் தொழில் பூங்கா, ஐடி பூங்கா, சட்டக்கல்லூரி மாணவிகளுக்கான விடுதி, விளையாட்டு திடல், ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார போக்குவரத்து அலுவலம், மாவட்ட நிர்வாக அலுவலகம் ஆகியவைகளுக்கு நிலம் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மெய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யவோ, பட்டா மாறுதல் செய்யவோ, தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர், பி.டி ஆதிகேசவலு அமர்வு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறுகையில், மேய்ச்சல் நிலங்களை மாற்ற அரசுக்கோ, மூன்றாம் நபருக்கோ, அதிகாரம் இல்லை. நிலத்தை மாற்றுவதாக இருந்தால் கால்நடை மேய்ச்சலுக்கான மாற்று நிலத்தை கண்டறிந்த பின்னரே மாற்ற முடியும். நில ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 


தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், வருவாய்த்துறை செயலாளர்  சார்பில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், தகுந்த மாற்று இடம் வழங்கப்பட்ட பின்னர் தமிழ்நாடு அரசு 97 மக்கள் நலத் திட்டங்களுக்காக நிலங்களை எடுக்கப்படும் எனவும், அதற்காக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் மாற்று இடம் கண்டறியப்பட்ட பின் புறம்போக்கு நிலங்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. 


அரசின் உத்தரவாதத்தை ஏற்று மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டால் மட்டுமே மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை மக்கள் நலத்திட்டங்களுக்கு உபயோகப்படுத்தலாம்.  மாற்று நிலம் ஒதுக்காமல் பட்டா மாற்றம் செய்ய கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.