எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

Manjula Devi
Apr 02, 2025,06:24 PM IST

சென்னை: கோடைக்காலம் தற்போது துவங்கி விட்ட நிலையில், மெட்ராஸ் ஐ பாதிப்பு வழக்கத்தை விட 20% அதிகரித்துள்ளதாக கண் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 


கோடை காலம் வந்துவிட்டாலே பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும். குறிப்பாக மெட்ராஸ் ஐ தொற்று அதிகரிக்கும். இதனால் மக்கள் முன்கூட்டியே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வர்.ஆனால் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக வெப்ப அலையுடன் வெயில் கொளுத்துகிறது. இதனால் நோய் தொற்றும் அபாயம் நிலவி வருகிறது. 


இந்த நிலையில் கால நிலை மாற்றம் காரணமாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்று நோய் வழக்கத்தை காட்டிலும் 20% அதிகரித்துள்ளது. அதாவது கண் விழியும் இமயம் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் தொற்று தான் மெட்ராஸ் ஐ. இது எளிதாக பரவக்கூடிய தொற்று நோயாகும். இந்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்தாலோ, அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகித்தாலோ கண் நோய் எளிதாக தொற்றிக் கொள்ளும். 


இப்படிப்பட்ட மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் தொற்று சமீப காலமாகவே அதிகரித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.  இது குறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் டாக்டர் சவுந்தரி கூறியதாவது, 




மெட்ராஸ் ஐ எளிதில்  பரவக்கூடிய தொற்று நோயாகும். எனவே, இந்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்திலேயே அறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஒரு கண்ணில் மெட்ராஸ் ஐ ஏற்பட்டால் மற்றொரு கண்ணிலும் பரவுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.


கடந்த சில வாரங்களாகவே மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என கூறியுள்ளார்.