வட சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 2026ல் மாதவரம் - ரெட்டேரி ரூட்டில் மெட்ரோ ஓடும்!

Su.tha Arivalagan
Apr 19, 2023,11:01 AM IST
சென்னை: வட சென்னையின் மாதவரம் - ரெட்டேரி பாதையில் 2026ம் ஆண்டில் மெட்ரோ ரயில்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கும் மிக முக்கிய போக்குவரத்தாக மெட்ரோ ரயில் உருவெடுத்துள்ளது. ஆரம்பித்த புதிதில் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆனால் தற்போது மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. கதவு மட்டும் இல்லையென்றால் மக்கள் புட்போர்டில் கூட பயணிக்கும் அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.



இந்த நிலையில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. பணிகள் நடைபெறும் பகுதிகளில் மக்களுக்கு பெரும் அசவுகரியங்கள் இருந்தாலும் கூட எதிர்காலத்தில் இப்பகுதியில் மக்கள் மிகப் பெரிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து சுலபமாக பயணிக்க முடியும் என்பது முக்கியமானது.

இந்த நிலையில்  வட சென்னையின் மாதவரம் - ரெட்டேரி இடையிலான பாதையில் 2026ம் ஆண்டு மெட்ரோ ரயில்கள் ஓடும் என்று தெரிய வந்துள்ளது. இங்கு  கட்டுமானப் பணிகள் வேகம் பிடித்துள்ளன. 2வது மெட்ரோ ரயில் பாதைத் திட்டத்தின் கீழ் முதலில் பூந்தமலில் முதல் பவர் ஹவுஸ் வரையிலான பாதையில் போக்குவரத்து தொடங்கும். இந்த பணிகள் 2025ம் ஆண்டில் முடிவடையும்.  போரூர் - பவர்ஹவுஸ் இடையிலான பணிகள் 2026ல் முடிவடையும்.

மாதவரம் - ரெட்டேரி சந்திப்பு இடையிலான பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருவ��ாகவும், இப்பாதையில் 2026ல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும் மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறினார்.  இதுவரை இந்தப் பாதையில் 65 தூண்கள் நிறுவப்பட்டு விட்டன. இந்தப் பாதையில் மொத்தம் 7 இடங்களில் மெட்ரோ நிலையங்கள் அமைகின்றன. மாதவரம் டெப்போ, அஸிஸி நகர், மஞ்சம்பாக்கம்,  வேல்முருகன் நகர், மாதவரம் பஸ் டெர்மினஸ், சாஸ்திரி நகர், ரெட்டேரி சந்திப்பு ஆகியவையே அவை என்று மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.