மதுரை மாநகரத்தின்.. பாரம்பரியத்தை பறைசாற்றும் மாமதுரை திருவிழா.. நாளை முதல்!
மதுரை: மதுரை மாநகரத்தின் பாரம்பரியத்தையும் பண்பாடையும் கொண்டாடும் விதமாக மாமதுரை விழா நாளை துவங்க உள்ளது. இவ்விழாவினை முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக நாளை காலை 9 மணிக்கு திறந்து வைக்க இருக்கிறார்.
திமுக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு நலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு நிறைய சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இது பலதரப்பு மக்களிடையே பேராதரவை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது மதுரை மாநகரத்தின் கடந்த கால பெருமிதத்தையும் பண்பாடையும் பறைசாற்றும் விதமாக மாமதுரை திருவிழா நாளை முதல் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா நாளை தொடங்கி ஆகஸ்ட் 11 வரை தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி மதுரை தமுக்கம் மைதானத்தில் முதல் மூன்று நாட்கள் அதாவது ஆகஸ்ட் 9, 10, 11 ஆகிய தேதிகளில் கலைக் கண்காட்சி மற்றும் மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஆகஸ்ட் 8ஆம் தேதியான நாளை, பலூன் திருவிழா வைகைக்கரை சாலை, எம்ஜிஆர் மேம்பாலத்தில் பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. அதேபோல் 9ஆம் தேதி குழந்தைகளுக்கான ஸ்பிளாஷ் அண்ட் ஷாப் திருவிழா காந்தி மியூசியத்தில் மதியம் 12:00 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதி மாரத்தான் மற்றும் சைக்லதான் ஆகிய போட்டிகள் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி அலங்கார வாகன கலை அணி வகுப்புகள், தெப்பக்குளத்தில் தொடங்கி தமுக்கம் மைதானம் வரை செல்கிறது. இந்த நிகழ்ச்சி மதியம் மூன்று மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் இதில் அமைச்சர்கள் பி .மூர்த்தி, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்பி சு. வெங்கடேசன், கோ. தளபதி, மதுரை மேயர் வி. இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்க இருகின்றனர். இந்நிகழ்ச்சியினை மதுரை மக்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை கொடுத்து பண்டைய கால பண்பாட்டை கொண்டாட மாமதுரை திருவிழாவிற்கு அனைவரும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
யங் இந்தியா அமைப்பு சார்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாமதுரை திருவிழா நடைபெறுவதால் பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று எம்.பி. சு. வெங்கடேசன் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக திருவிழா பாடல் குறுந்தகட்டை சு.வெங்கடேசன் வெளியிட்டார்.