26 வயசுல ஆரம்பிச்ச கதை இது.. இப்போ 43 வயசாய்ருச்சு.. இன்னும் நிக்கலை.. இது முடியாத கதை!

Su.tha Arivalagan
Mar 23, 2025,11:01 AM IST
சென்னை: 25 வயதில் இருந்த அதே எனர்ஜியோடு, 43 வயதிலும் இருப்பது அரிது, ஆச்சரியமானதும் கூட. அப்படி ஒரு நடமாடும் அதிசயமாக இருக்கிறார் தல தோனி. தனது 18வது ஐபிஎல் தொடரில் விளையாட படு ஆர்வமாக காத்திருக்கிறார் தோனி.

இந்தியாவில் ஐபிஎல் தொடரானது 2008ம் ஆண்டு அறிமுகமானது. இப்போது 18வது சீசனுக்கு வந்துள்ளது. தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக ஐபிஎல்லில் அறிமுகமானபோது அவருக்கு வயது ஜஸ்ட் 26தான். இளம் பிளட்டாக அறிமுகமான அவர் இன்று 43 வயதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருப்பது இளம் வீரர்களுக்கு மிகப் பெரிய பூஸ்ட்டான விஷயம்தான்.

தோனி தலைமையில் 5 கோப்பைகளை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இன்னொரு ஐபிஎல் சண்டியரான மும்பை இந்தியன்ஸை ஒரு காலத்தில் அலற விட்ட அணி சென்னை. இப்போது சென்னையும் சரி, மும்பையும் சரி சம பலத்துடன் திகழ்கின்றன. இந்த வருடத் தொடரை இரு அணிகளும் முதல் போட்டியில் நேருக்கு நேர் மோதி தொடங்கவுள்ளன.



மும்பையும் சரி சென்னையும் சரி தங்களது 6வது கோப்பையை எதிர்நோக்கி இந்தத் தொடரில் நுழைந்துள்ளன. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் கடந்த முறையை கேப்டனாக இல்லாமல் வீரராக களம் இறங்கினார் தோனி. அதேபோலத்தான் ரோஹித் சர்மாவும் கடந்த முறை கேப்டன் பதவியிலிருந்து மாற்றப்பட்டார். மீண்டும் இரு வீரர்களும் இந்த தொடரிலும் சாதாரண வீரர்களாக விளையாடவுள்ளனர்.

தோனியின் கதை வேறு. அவர் கிரவுண்டுக்குள் வந்து விட்டாலே எதிர்பார்ப்பும் ஏகத்துக்கும் அவர் மீது அமர்ந்து விடும். அவர் பேட் செய்தால் அதிரடியை மட்டுமே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அடிக்க ஆரம்பித்து விட்டால் 50, 100 என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த அளவுக்கு தோனி மீதான நம்பிக்கை அதீதமாக உள்ளது. அவரும் பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை. ஏதாவது ஒரு மாஜிக் செய்து விட்டுப் போவது தோனிக்கு பழக்கமாகி விட்டது.

25 வயதில் அவரது தலைக்குப் பின்னால் இருந்த ஆரா இன்னும் கூட அப்படியே இருப்பதே பெரிய விஷயம்தான். இன்னும் அவர் சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார். 2020ம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் கூட ஐபிஎல்லைப் பொறுத்தவரை தொடர்ந்து ஹாட்டான ஒரு வீரராக வலம் வருகிறார்.

அவரது நிதானம், தலைமைத்துவக் குணம், பக்குவம், முதிர்ச்சி, சூழலை துல்லியமாக கணிப்பது என பல விஷயங்களுக்காக தோனி தனித்து விளங்குகிறார். மற்றவர்களை விட உயர்ந்து நிற்கிறார். வருகிற ஜூலை மாதம் தோனிக்கு 44 வயது பிறக்கிறது. கடந்த 18 ஐபிஎல் சீசன்களில் அவர் 16 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியுள்ளார். 2 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஸ்பென்ட் செய்யப்பட்டதால் வேறு அணியில் விளையாடியிருந்தார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக இல்லாமல் தற்போது விக்கெட் கீப்பராக, சாதாரண  வீரராக களத்தில் இருக்கிறார் தோனி. அப்படி இருந்தாலும் கூட  கேப்டன் ருத்துராஜ் கெய்கவாட்டுக்கும் சரி, பந்து வீச்சாளர்களுக்கும் சரி, பேட்ஸ்மேன்களுக்கும் சரி சிறந்த ஆலோசகராக, வழிகாட்டியாக திகழ்கிறார் தோனி.

கடந்த 18 சீசன்களில் மொத்தம் 5243 ரன்களைக்  குவித்துள்ளார் தோனி. ஒட்டுமொத்த ரன் குவிப்பாளர்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறார் தோனி. முதலிடத்தில் இருப்பவர் விராட் கோலி. ஐபிஎல்லில் தோனியின் பேட்டிங் சராசரி 39.12 ஆகும். தோனியின் ஸ்டிரைக் ரேட் 137.53  ஆகும்.

ஐபிஎல் போட்டிகளில் தோனி 252 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்தப் பட்டியலில் டாப்பில் இருப்பவர் கிறிஸ் கெய்ல். அவர் 357 சிக்ஸர்களை விளாசியுள்ளார். கோலி 272, ரோஹித் சர்மா 280 என சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.



ஒரு விக்கெட் கீப்பராக 180 டிஸ்மிஸ்ஸல்களை செய்துள்ளார் தோனி. அதில் 141 கேட்ச், 39 ஸ்டம்பிங்ஸ் அடங்கும். ஒரு அதிவேக விக்கெட் கீப்பராக விளங்கும் தோனியை முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி, செல்லமாக பிக்பாக்கெட் என்று அழைப்பார்.

தோனியின் பேட்டிங் ஸ்டைலும் கூட தனிதான். அவரது ஹெலிகாப்டர் ஷாட்டுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. கடைசி ஓவர்களில் களம் இறங்கினாலும் நாலு ஷாட்களை நச்சென்று இறக்கி அவர் விளையாடும் அழகே தனிதான்.

கடந்த முறை பெரிய அளவில் தோனி விளையாடவில்லை. கடைசி நேரத்தில்தான் களம் இறங்கி வந்தார். இந்த முறையாவது அவர் அதிரடி காட்டுவாரா, பழைய பாணியில் பாய்ந்து வெளுப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். அதேசமயம், தல நீ வந்தா மட்டும் போதும்.. நாங்க கொண்டாடிக்கிறோம் என்று சொல்லும் தோனி ரசிகர்கள்தான் அதிகம் என்பதால் இந்த முறையும் சிஎஸ்கே  திருவிழா களை கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.